Published : 13 Feb 2015 10:27 AM
Last Updated : 13 Feb 2015 10:27 AM

பெற்றோர் தரும் மனஅழுத்தம் குழந்தைகளை பாதிக்கிறது: காந்திகிராமம் பல்கலை. ஆய்வில் தகவல்

`பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதில் பெற்றோர்களின் பங்கு' என்பது குறித்த குழந்தைகளுடைய மூளை அறிவாற்றல் அறிவியல் ஆராய்ச்சி காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை தலைவர் பேராசிரியர் ஜாகீதா பேகம், சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள பீக்கிங் பல்கலைக்கழகத்தில் ஒரு மாதம் தங்கியிருந்து அந்நாட்டின் குழந்தைகள் கல்வி முறையை நம் நாட்டு கல்விமுறையுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பேராசிரியர் ஜாகீதா பேகம் `தி இந்து'விடம் கூறியது:

‘‘பள்ளிகளில் தரமான ஆசிரியர்கள் இருக்கின்றனரா? அனைத்து பாடங்களுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறதா? மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்கின்றனரா போன்றவற்றை பெற்றோர்கள் ஆராய வேண்டும். பள்ளிகளில் கண்டிப்பு என்ற பெயரில் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் கூடாது. ஓரளவு கண்டிப்பு, நடுநிலை மனப்பான்மையுடன் அணுகும் பள்ளிகளில் பெற்றோர் குழந்தைகளை சேர்க்க வேண்டும். மொழி கல்வியையும், விளையாட்டையும் பெரும்பாலான பள்ளிகள் புறக் கணிக்கின்றன. ஒரு மணி நேரம் மாணவர்கள் விளையாட்டில் ஈடுபட் டால் அவர்களுடைய மூளையில் உள்ள நீரோ டிரான்ஸ்மீட்டர்களில் சுரக்கும் நார் எபி நேப்ரின் ரசாயனம் சரியான அளவில் சுரக்கிறது. இது மூளையில் இருந்து சுரப்பதால் உடலுக்கும், மனதுக்கும் அதிகப்படியான உற்சாகத்தை தருகிறது.

2 மணி நேரம் வகுப்பறையில் அமர்ந்துவிட்டால் குழந்தையின் மூளை இயற்கையாகவே 3-வது மணி நேரத்தில் சோர்வடைந்து, கவனிக்கும் திறன் மங்கிவிடும். அதனால், 3-வது மணி நேரத்தில் இருந்து குழந்தைகள், மாணவர் களுக்கு ஓவியம், விளையாட்டு, இசை உள்ளிட்ட மற்ற தனித் திறன்களை வெளிப்படுத்தும் பாடங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இதனால் நல்ல உடற்பயிற்சி கிடைக்கும். மூளை யும் சுறுசுறுப்படையும்.

மதியம் சாப்பிட்ட பின் வகுப் பறையில் கண்டிப்பாக தூக்கம் வரும். அதனால் கார்போ ஹைட்ரேட் அதிகமான அரிசி உணவை பெற்றோர்கள் கொடுக்கக்கூடாது. மதிய உணவுக்கு காய்கறிகள், பருப்பு உள்ளிட்ட புரோட்டீன் உணவை அதிகம் தர வேண்டும். வகுப்பறை அட்டவணையை சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு தயாரிக்க வேண்டும்.

3 முதல் 4 வயதுடைய குழந்தைகள் 3 மொழிகளை தாராளமாக கற்றுக்கொள்ளக்கூடிய திறன் இயற்கையிலே அவர்களின் மூளைக்கு உண்டு. 5-ம் வகுப்பு படிப்பதற்கு முன் குழந்தைகள் மொழிகளை கற்கவேண்டும். 15 வயதுக்கு மேல் மொழிகளை எளிதாக கற்றுக் கொள்ள முடியாது. இன்று கல்லூரி முடிக்கும் அதிகப் படியான மாணவர்கள் தமிழ், ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியவில்லை. மொழி கல்விக்கு முக்கியத்துவம் தரப்படாததே இதற்கு காரணம். மனப்பாடம் செய்யும் நினைவாற்றலை மட்டுமே பரிசோதிக்கக்கூடிய தேர்வு முறைகள் மாற வேண்டும். மாணவர் களுடைய அறிவாற்றல் திறன்களை பரிசோதிக்கக்கூடிய தேர்வு முறை வர வேண்டும். பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர்த்து அதிக மதிப்பெண் எடுக்க வேண்டுமென குழந்தைகளை தொந்தரவு செய்யக்கூடாது.

சீனாவில் குழந்தைகளுக்கு தாய்மொழிக் கல்விக்கு முக்கியத் துவம் தரக்கூடிய கல்விமுறை, அறிவாற்றல் திறன்களை பரிசோதிக்கக்கூடிய தேர்வுமுறை உள்ளது. நமது நாட்டில் கல்வி முறை, பெற்றோர் தரும் மன அழுத்தம் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது’’ என்றார்.

சீனாவில் குழந்தைகளுக்கு கற்பிக்கப்படும் கல்வி முறையை சுட்டிக்காட்டும் பேராசிரியர் ஜாகீதா பேகம்.

மொழி கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும். மனப்பாடம் செய்யும் நினைவாற்றலை மட்டுமே பரிசோதிக்கக்கூடிய தேர்வு முறைகள் மாற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x