Published : 10 Feb 2014 12:00 AM
Last Updated : 10 Feb 2014 12:00 AM

கொள்கையே இல்லாதவர் விஜயகாந்த்: தமிழருவி மணியன் கடும் தாக்கு

கொள்கையே இல்லாத தலைவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அதன் தலைவர் தமிழருவி மணியன் பேசியது:

காங்கிரஸ் கட்சியை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டியது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை. நாம் இந்தியத் தமிழர் என்ற முறையில் நமக்கு இன்னொரு முக்கிய கடமையும் இருக்கிறது. 40 ஆண்டுகளாக தமிழகத்தில் தனிமனித விரோத அரசியல் நடத்திவரும் திராவிடக் கட்சிகளை அகற்றுவதுதான் அது. முதலில் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தோம். இப்போது அதிமுகவுக்கு மாற்று அணி, பாஜக கூட்டணி என்றாகிவிட்டது. திமுக.வை 3-வது இடத்துக்குத் தள்ளிவிட்டால், சட்டப் பேரவைத் தேர்தலை நோக்கி அதனால் வீறுநடை போட முடியாது. ஆக, ஒருநாள் நாம் நிச்சயமாக அரசு நாற்காலியில் அமர்வோம்.

கருணாநிதி இருக்கும் வரைதான் அதிமுக இருக்கும். திமுக போனதும், அதிமுக.வும் விழுந்துவிடும். கருணாநிதியை வீழ்த்த நாம் நிறைய திட்டமிட வேண்டும், வியூகம் வகுக்க வேண்டும். ஜெயலலிதாவை ஒன்றுமே செய்ய வேண்டாம். அவரே தனது தோல்வியை தேடிக்கொள்வார்.

மதிமுக, பாமக, தேமுதிக.வை ஒரே அணிக்கு கொண்டுவரும் வியூகத்தை நான் பாஜக.வுக்குக் கொடுத்தேன். இப்போது பாஜக, மதிமுக, இஜக எல்லாம் ஒரு வட்டத்தில் இணைந்துவிட்டன. தேமுதிக மீது எனக்கு வருத்தம். நான் தெளிவாகப் பேசியும்கூட, அவர் தெளிவான முடிவெடுக்காமல் இருக்கிறார். ‘என்னை எல்லாரும் கூப்பிடுறாங்க’ என்கிறார்.

நமது காந்திய மக்கள் இயக்கமும் அரசியல் கட்சியாக மாறப்போகிறது. இன்னும் சில ஆண்டுகளில் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்படப் போகிறது. அந்த இடத்தை நாமே நிரப்புவோம். அந்த இலக்கை அடைய இன்னும் 10 ஆண்டு ஆகலாம். அதுவரையில் அந்த இடம் காலியாக இருக்குமா? அதுவரை அந்த இடத்தில் இருக்கத் தகுதியான ஆள் என்று நாங்கள் அடையாளம் காட்டும் தலைவர் தான் வைகோ.

கூட்டணி ஆட்சி

தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி வந்ததில்லை. ஒருமுறை வந்த வாய்ப்பையும் காங்கிரஸ் தவறவிட்டுவிட்டது. ஆனால், 2016-ல் தமிழகத்தில் கண்டிப்பாக கூட்டணி ஆட்சிதான் அமையும். அதில் நாமும் இருப்போம். கண்ணுக்குத் தெரிகிறது அந்தப் பாதை. ஆனால், அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும். ஊர் கூடி இழுத்தால்தான் தேர் ஓடும். அதற்கு எப்படி உழைக்க வேண்டும் என்று மாவட்டத் தலைவர்களை அழைத்து தனியாக கூட்டம் நடத்த உள்ளேன்.

நீங்கள் நினைக்கலாம் முதலில் என்னை மட்டும் இந்த நாற்காலியில் உட்கார வைத்துவிடலாம் என்று. ஆனால், நான் கடைசி வரையில் எந்தப் பதவிக்கும் போட்டியிடப் போவதில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x