Published : 01 Feb 2015 11:59 AM
Last Updated : 01 Feb 2015 11:59 AM
மதவாதத்துக்கு எதிரான கருத்தரங்குகளை தமிழகம் முழுவதும் நடத்துவது குறித்து தமாகா பரிசீலித்து வருகிறது.
காங்கிரஸில் இருந்து விலகி தமாகா என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள ஜி.கே.வாசன், மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். இதன் முதல்கட்டமாக ‘மதச்சார்பற்ற இந்தியாவின் சவால்களும் அச்சுறுத்தல்களும்’ என்று தலைப்பில் சென்னையில் நேற்று முன்தினம் கருத்தரங்கு நடத்தினார். இதில் இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தேசிய, மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கருத்தரங்குக்கு தலைமை ஏற்று பேசிய ஜி.கே.வாசன், “மதம் என்பது ஒரு தனி மனிதனை சார்ந்து இயங்குவதில் தவறில்லை. ஆனால், ஒரு அரசு மதம் சார்ந்து இயங்குவது ஆபத்தான விஷயம். பாஜக மதத்தை வைத்து ஆட்சி செய்கிறது. இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. பிருந்தா காரத் பேசும்போது, ‘‘காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டும் என்கின்றனர். இது மிகவும் வெட்கக்கேடான விஷயம். பெரியார் மண்ணிலிருந்து சொல்கிறேன். இதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்துத்துவம் என்பது சிறுபான்மையினர் மீதான தாக்குதல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகநீதியின் மீதான தாக்குதல். இதைத் தடுக்க மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்’’ என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு ஆகியோர், “மதவாத சக்திகளை எதிர்க்க தேர்தல், அரசியல் இவற்றைத் தாண்டி எல்லோரும் வேற்றுமை பார்க்காமல் இணைய வேண்டும்’’ என்றனர்.
‘‘இதுபோன்ற கருத்தரங்கை தமாகா நடத்துவது வரவேற்கத் தக்கது. இது சென்னை யில் மட்டுமன்றி, தமிழகம் முழுவதும் நடத்தப்பட வேண்டும். இதற்கு மதச்சார்பற்ற சக்திகள் ஒத்துழைக்க வேண்டும்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் வலியுறுத்தினர்.
இந்த கருத்தரங்கு குறித்து தமாகா முத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
மதச்சார்பின்மை பேசுகிற கட்சிகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் உள்ளன. நாட்டில் மதச்சார்பின்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது. இதை உணர்ந்தே தேர்தல் மற்றும் அரசியலைத் தாண்டி இடதுசாரிகள், தலித், சிறுபான்மை அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு மதச்சார்பற்ற அணியை தமாகா தொடங்கியுள்ளது. மதவாதத்துக்கு எதிரான கருத்தரங்கை மாநிலம் முழுவதும் நடத்த வேண்டும் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது தொடர்பாக தீவிரமாக பரிசீலித்து வருகிறோம். இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT