Last Updated : 19 Feb, 2015 10:34 AM

 

Published : 19 Feb 2015 10:34 AM
Last Updated : 19 Feb 2015 10:34 AM

மதுரை விமான நிலைய விரிவாக்கம் 2020-ல் முடியுமா? - புதிய சாலையால் 8 கி.மீ. சுற்றிச் செல்லும் நிலை

மதுரை விமான நிலைய விரிவாக்கத் துக்காக புதிய சாலையை யார் அமைப்பது என்பதில் முடிவு எடுக்கப்படாததால், 8 ஆண்டுகளாகியும் பணிகள் தொடங்கப்படாததுடன் 2020-க்குள் பணி முடியுமா என்பதே சந்தேகமாக உள்ளது.

அருப்புக்கோட்டை மார்க்கமாக வந்துசெல்லும் வாகனங்கள் 8 கி.மீ. தொலைவை கூடுதலாக சுற்றும் வகையில் புதிய சாலையை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் ரூ.138 கோடியில் புதிய விமான நிலைய முனைய கட்டிடம் அமைக்கப் பட்டு சர்வதேச விமான நிலை யமாக்கப்பட்டது. தற்போது கொழும் புவுக்கு விமானங்கள் இயக்கப் படுகின்றன. விரைவில் துபாய், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட மேலும் பல நாடுகளுக்கு சர்வதேச பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களை இயக்க முயற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் போயிங் ரக விமானங்களை இயக்க வேண்டுமானால் விமான நிலைய ஓடுபாதையின் நீளத்தை அதி கரிக்கச்செய்வது அவசியம். பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாட்டு விமான நிறுவனங்கள் ஓடுபாதை நீளத்தை அதிகரிக்காதவரை மதுரைக்கு விமானங்களை இயக்க முடியாது எனத் தெரிவித்துவிட்டன. தற்போது 7,500 அடியாக உள்ள மதுரை விமான நிலைய ஓடு பாதையின் நீளத்தை 12,500 அடியாக உயர்த்தினால் மட்டுமே இது சாத்தியம். இதற்காக 615 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

ஓடுபாதையின் நீளத்தை விமான நிலையத்தின் கிழக்கு திசையில் தற்போது அருப்புக்கோட்டை செல்லும் சாலையை கடந்து 3 கி.மீ.க்கும் மேல் நீட்டிப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தற்போது அருப்புக்கோட்டை, திருமங்கலம் செல்லும் புறவழிச் சாலையை மண்டேலா நகருடன் துண்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாறாக, மண்டேலா நகரிலிருந்து பெருங்குடி தனியார் கல்லூரி, பாட்டில் கம்பெனி வழியாக விமான நிலையத் தின் மேற்கு பகுதியில் திருப்பரங் குன்றம்- நிலையூர் சாலையை கடந்து புதிய சாலை அமைக்கப் படும். சுற்றுச்சாலையின் 14.2-வது கிலோமீட்டரில் மண்டேலா நகரில் தொங்கும் இந்த 7 கி.மீ. சாலை கப்பலூர் செல்லும் புறவழிச்சாலையின் 22-வது கி.மீட்ட ரில் இணையும். இங்கிருந்து திருமங் கலம் செல்பவர்கள் தற்போதுள்ள சாலைவழியை பயன்படுத்தலாம்.

தற்போதுள்ள தொலைவில் ஒரு கி.மீ. வரை குறையும் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, தூத்துக்குடி நோக்கி செல்லும் வாகனங்கள் கப்பலூர் சுற்றுச்சாலையிலிருந்து, மீண்டும் கிழக்கு நோக்கி திரும்பி 5 கி.மீ. தூரத்திலுள்ள வலையங்குளம் அருகே இணையும் 4 வழிச்சாலையை அடைய வேண்டும்.

தற்போது மண்டேலா நகரிலிருந்து 3 கி.மீ. சென்றாலே வலையங்குளம் அருகே 4 வழிச்சாலையை இந்த வாகனங்கள் அடையலாம். ஆனால் விமான நிலையத்தை சுற்றி அமை யவுள்ள புதிய சாலையில் 12 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். இத னால் கூடுதாக 8 கி.மீ. சுற்ற வேண் டிய நிலை உருவாகும். இதைத் தவிர்க்க மாற்று யோசனை குறித்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இன்னும் நிறைவேறவில்லை

இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியது: 8 ஆண்டுகளாக விமான நிலைய விரிவாக்கம் குறித்த திட்டம் தயாராகியும் இன்னும் நிறைவேற வில்லை. புதிய சாலையை மாநகராட்சி தான் அமைக்க வேண்டும் என விரும்புகிறது. நெடுஞ்சாலைத் துறை அமைக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. ஆனால், சாலையை ஒப்படைக்க மாநகராட்சி முன்வரவில்லை. சாலையை அமைப்பது யார் என்ற பிரச்சினைக்கு முடிவு காண யாருக்கும் ஆர்வம் இல்லை.

இது குறித்து முடிவெடுக்க மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, விமான நிலைய அதிகாரிகள் இணைந்து பேச்சு நடத்தினால் மட்டுமே முடிவு காண முடியும். சாலை அமைக்க அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளன. ரூ.40 கோடியில் அமையும் சாலையில், பெருங்குடி, நிலையூர் சாலைகளை கடக்க 2 மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

உடனே பணியை தொடங்கினாலே 2 ஆண்டுகளில் சாலைப்பணி முடியும். இதன் பின்னர், வாகனங்களை புதிய சாலைக்கு மாற்றிவிட்டு, விமான நிலைய விரிவாக்கப் பணியை தொடங்க வேண்டும். இதற்கு குறைந்தது 3 ஆண்டுகளாகும். 2020-ல் முழுமையான சர்வதேச விமான நிலையமாக மாறும்.

கிழக்கு பகுதியில் மட்டும் விமான நிலைய பாதை விரிவுபடுத்தவுள்ளதாலும், வருங்காலத்தில் மேலும் விரிவுபடுத்த வேண்டிய நிலையை கருத்தில் கொண்டு, அப்பகுதியில் புதிய சாலை அமைக்க வேண்டாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால்தான் மேற்கு பகுதியில் அதிக தூரம் சுற்ற வேண்டிய நிலை ஏற்படவுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x