Published : 09 Feb 2014 06:01 PM
Last Updated : 09 Feb 2014 06:01 PM
பசும்பொன் தேவரின் கொள்கைகளை வென்றெடுக்க வேண்டிய நாள் வெகுதூரத்தில் இல்லை. அந்த லட்சியத்தை அடைய எங்களுக்கு என்றென்றும் துணை நிற்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்து ராமலிங்கத் தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி நடைபெற்ற குருபூஜை விழாவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா பங்கேற்றார்.
அப்போது அவரிடம் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்க வேண்டும் என அங்கிருந்த பொதுமக்களும், கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகளும் வேண்டுகோள் விடுத்தனர்.
இதை ஏற்ற முதல்வர் ஜெயலலிதா, முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் தங்கக் கவசம் அணி விக்கப்படும் என அப்போது அறிவித்தார். தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா சென்னை யில் இருந்து தனி விமானம் மூலம் ஞாயிற்றுகிழமை காலை 12.30 மணி அளவில் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் முதல்வர் ஜெயலலிதாவை மதுரை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், மதுரை மாநகராட்சி மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா, மாநகராட்சி ஆணையர் கிரண் குராலா, மாநகர் காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பால கிருஷ்ணன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் உள்பட பலர் வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பசும்பொன் புறப்பட்டார். பகல் 1.30 மணிக்கு பசும்பொன் சென்றடைந்தார். அதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா காரில் தேவர் நினைவிடத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். வழிநெடுகிலும் அவரை ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள், ஏராளமான பெண்கள் முளைப்பாரி ஏந்தி அணி வகுத்து நின்று வரவேற்றனர்.
தேவர் நினைவிடத்தில் அமைச் சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எஸ்.சுந்தர்ராஜ், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, வைத்தியலிங்கம், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் முதல்வரை வரவேற்று தேவர் சிலை அமைந்துள்ள நினைவிடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
13 கிலோ தங்கத்தால் செய்யப் பட்டுள்ள தங்கக்கவசத்தை, நினைவிடப் பொறுப்பாளர் காந்திமீனாளிடம் முதல்வர் ஜெய லலிதா வழங்கினார். பின்னர் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தங்கக் கவசத்தை தேவர் சிலைக்கு அணிவித்து வழிபாடு நடத்தினர்.
அப்போது முதல்வர் ஜெய லலிதா தேவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்தார். அவருக்கு தேவர் நினைவிடம் சார்பில் செங் கோல், பட்டுத் துண்டு, பிரசாதம் வழங்கினர்.
பின்னர் நினைவிடம் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா தொண்டர்களைப் பார்த்து கை யசைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை அ.தி.மு.க. சார்பில் அணிவித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாகக் கொண்டு செயல்பட்ட தேவர் திருமகனார் இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டவர். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்தவர், மக்கள் நலனுக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் அயராது பாடு பட்டவர்.
‘வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம், விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்’ என்று முழங்கிய தேவரின் பொன்மொழி இக்காலத்துக்கும் பொருத்தமாக உள்ளது. ஆன்மிகம், தேசியம், பொதுவுடமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியவை இவருடைய முக்கிய கொள்கைகளாக இருந்தன. இந்த கொள்கைகளைத்தான், நாங் களும் பின்பற்றி வருகிறோம். உங்கள் ஆதரவுடன், தேவரின் கொள்கைகளை வென்றெடுக்க வேண்டிய நாள் வெகுதூரத்தில் இல்லை. அதற்கான காலம் கனிந்து விட்டது. அந்த லட்சியத்தை அடைய நீங்கள் எங்களுக்கு என்றென்றும் துணை நிற்க வேண்டும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.
நிகழ்ச்சியில் ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, புதுக் கோட்டை, திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்கள், தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT