Published : 12 Feb 2015 08:24 AM
Last Updated : 12 Feb 2015 08:24 AM

இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: ஸ்ரீரங்கத்தில் நாளை வாக்குப்பதிவு- பாதுகாப்பு பணியில் துணை ராணுவம், 2,600 போலீஸார்

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இதையடுத்து, நாளை (13-ம் தேதி) வாக்குப் பதிவை அமைதியாக நடத்தி முடிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகவும் தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதன் மூலம் தனது பதவிகளை இழந்தார். இதையடுத்து, ரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பு கடந்த ஜன. 12-ம் தேதி வெளியானது.

வேட்புமனுத் தாக்கல் ஜன. 19-ல் தொடங்கி 27-ல் முடிவடைந்தது. வேட்புமனுக்கள் பரிசீலனை 28-ம் தேதி நடந்தது. மனுக்களை வாபஸ் பெற இறுதி நாளான ஜன. 30-ம் தேதி வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியானது.

அதிமுக சார்பில் எஸ்.வளர்மதி, திமுக சார்பில் என்.ஆனந்த், பாஜக சார்பில் எம்.சுப்ரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கே.அண்ணாதுரை உள்ளிட்ட பிரதானக் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 29 பேர் களத்தில் உள்ளனர்.

சிறப்புப் பார்வையாளர்கள்

தேர்தலுக்காக பொதுப் பார்வையாளர், செலவின பார்வையாளர் ஆகியோருடன் முதல்முறையாக காவல் துறை நடவடிக் கைகளை கண்காணிக்க பார்வை யாளராக ஐபிஎஸ் அதிகாரி வினோத்குமார் நியமிக்கப்பட்டார். தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து கர்நாடக தலைமைத் தேர்தல் அலுவலர் அனில்குமார் ஜா சிறப்புப் பார்வை யாளராக ரங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார், ரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் கபிலன், ரங்கம் தொகுதி தேர்தல் அலுவலர் மனோகரன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அந்தப் பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டனர்.

தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதிமுகவினர் ராஜகோபுரம் முன்பும், திமுகவினர் தேவி கலையரங்கம் முன்பும், பாஜக வேட் பாளர் திருவானைக்கா கோயில் அருகிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மூலத்தோப்பு பகுதியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.

நாளை வாக்குப் பதிவு

நாளை (13-ம் தேதி) காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. வாக்குப் பதிவுக்காக 740 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வீடியோ பதிவுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

தொகுதியில் 322 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளன. வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 572 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று மாலைக்குள் அவரவருக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்குச் சென்று பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொகுதி முழுவதும் ரோந்து செல்ல கூடுதல் பாதுகாப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. 10 கம்பெனிகளை சேர்ந்த 620 மத்திய துணை ராணுவப் படையினர் மற்றும் தமிழக போலீஸார் 2,600 பேர் இணைந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

மூன்றடுக்கு பாதுகாப்பு

வாக்குப்பதிவு முடிந்தவுடன் பூத் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்படும். அங்கு 24 மணி நேரமும் துணை ராணுவத்தினர் மற்றும் போலீஸார் அடங்கிய மூன்றடுக்கு பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிப். 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்குப் பதிவை முதல்முறையாக உள்ளூர் அரசு கேபிள் டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x