Published : 12 Feb 2015 09:15 PM
Last Updated : 12 Feb 2015 09:15 PM
உலகிலேயே ஒரு மொழிக்காக நூற்றுக்கணக்கானவர்கள் உயிர்நீத்த போராட்டமாக கருதப்படும் 'தமிழக மொழிப் போர்' வரலாற்றில் பொள்ளாச்சிக்கு தனி இடம் உண்டு.
1938-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும், 1948-ல் இந்தியை கட்டாயப் பாடமாக்குவதற்கு எதிரான போராட்டத்திலும், 1965-ல் ஆட்சி மொழியாக இந்தியை அறிவிப்பதை எதிர்த்து நடந்த போராட்டத்திலும், பொள்ளாச்சி தனது முழுப் பங்களிப்பைக் கொடுத்துள்ளது.
1965, பிப்.12-ம் தேதியன்று, பொள்ளாச்சியில் அமைதியாக நடந்து வந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் திடீரென்று ராணுவம் களம் இறக்கப்பட்டு, நூற்றுக்கும் அதிகமானவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிப்.12. தமிழுக்காக தியாகிகள் பலர் உயிர் நீத்ததன் 50-ம் ஆண்டு நினைவு தினமாகும்.
பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இரா.மனோகரன் கூறும்போது, பிப்ரவரி மாதம் பொள்ளாச்சியில் போராட்டம் கூடுதல் வீரியம் பெற்று கட்டுக்கடங்காமல் போவதை அறிந்து ராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது. பிப்.12-ம் தேதி, பொள்ளாச்சியில் மிகப்பெரிய அளவில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. கடை வீதியில் ராணுவம் முன்னேறி தடுக்க, பொதுமக்கள் அனைவரும் பொருட்களை சாலையில் வைத்து தீயிட்டுக் கொளுத்தினர்.
கடைகளின் முன்பிருந்த பந்தல்கள் பிரித்து தீ வைக்கப்பட்டன. அதேநேரம், இந்தி பாடத்தை எதிர்த்து பாலகோபாலபுரம் வீதி பள்ளியும், நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் தீ வைக்கப்பட்டது. தபால்நிலைய முகப்பில் இந்தி எழுத்துக்களை அழிக்க முயன்ற மாணவர் ஒருவரை ராணுவம் சுட்டது.
போராட்டம் உச்ச நிலையில் இருந்தபோது, சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரே முகாமிட்டிருந்த ராணுவத்தை எதிர்த்து முன்னேறிய போராட்டக் குழுவினர் கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் இறந்தவர்களின் உடல்கள் உடுமலை சாலை மயானத்திலும், மதுக்கரை ராணுவ முகாம் அருகில் எரியூட்டியதாகவும், இறந்தவர்கள் எண்ணிக்கையை அன்றைய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை எனவும் வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. அ.ராமசாமி எழுதிய 'என்று முடியும் இந்த மொழிப்போர்' என்ற புத்தகத்தில் 'பொள்ளாச்சி படுகொலை' என்ற தனி அத்தியாயமே உள்ளது' என்றார்.
தமிழுக்காக பெரிய போராட்டங்களை பொள்ளாச்சி சந்தித்தும், இன்றுவரை இங்கு மொழிப் போர் தியாகிகள் அடையாளம் காணப்படவில்லை. வருடா வருடம் ஜன.25-ம் தேதி அனைத்துப் பகுதிகளையும் போல, பொள்ளாச்சியிலும் அரசியல் கட்சிகள் சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு பொதுக்கூட்டம் நடக்கின்றன. ஆனால் இந்த மொழிப் போரில் பொள்ளாச்சியின் பங்கு என்ன? அதில் இறந்தவர்கள் எத்தனை பேர்? நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற விழிப்பை இன்றுள்ள மக்களிடையே ஏற்படுத்துவது அவசியம். 50-வது ஆண்டு நினைவிலிருந்து தொடங்கட்டும் இந்த வரலாற்றுத் தேடல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT