Published : 15 Apr 2014 06:00 PM
Last Updated : 15 Apr 2014 06:00 PM
ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்காமல் 7 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மக்களவைத் தேர்தலுக்காக யாரும் வாக்குக் கேட்டு வரவேண்டாமென பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஊரின் எல்லையில் பேனர் வைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ரயில் நிலையம் அருகேயுள்ள லெவல் கிராசிங்கைக் கடந்து செல்லும் சாலை 45 கிராமங்களை இணைப்பதோடு புதுக்கோட்டை, திருச்சி இடையேயான இணைப்பு சாலையாகவும் இருப்பதால் இவ்வழியே ஏராளமான கனரக வாகனங்களுடன் நகர் மற்றும் தொலை தூரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இவ்வழியே ரயில் செல்லும்போது லெவல் கிராசிங்கில் கதவு மூடப்படுவதால் மறுபுறம் செல்ல முடியாமல் இரு புறமும் ஏராளான வாகனங்களோடு மக்களும் காத்திருப்பர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் தாமதமாகச்செல்லும் நிலையும், கர்ப்பிணிகள், நோய் பாதிப்புக்குள்ளானோர் என தினமும் மக்கள் துயரநிலைக்கு ஆளாகின்றனர்.
இத்தகைய சிரமத்தைப் போக்கும்வகையில் லெவல் கிராசிங் அருகே சுரங்கப் பாதை அமைக்க வேண்டுமென கடந்த பல ஆண்டுகளாக மக்கள் போராடிவருகின்றனர். இதையடுத்து கடந்த 2007-ல் ரயில்வே நிர்வாகம் லெவல் கிராசிங் அருகே சுரங்கப்பாதை அமைக்க ரூ.2.50 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது.
ஆனால், பணி தொடங்கவில்லை. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழையாமையே காரணமென தெரியவந்துள்ளது. இது குறித்து மக்களவை, சட்டப்பேரவை என எந்த உறுப்பினரும், மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை.
இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த 2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க வேண்டாமென்ற 49-ஓ-வுக்கு இக்கிராமத்தினர் ஆதரவு அளித்துள்ளனர். மேலும், இக்கோரிக்கை குறித்து மறியல், ஆர்ப்பாட்டம் வாயிலாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் பிரச்சினை தீரவில்லை.
இந்நிலையில் மீண்டும் தற்போதைய தேர்தலுக்கு கீரனூர் பகுதிக்கு எந்த வேட்பாளர்களும் வாக்குக் கேட்டு வரவேண்டாமென பேனர் மூலம் அறிவித்துள்ளனர்.
நோட்டாவுக்கே எங்கள் வாக்கு…
இதுகுறித்து போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கீரனூர் எஸ்.நாதன் கூறியது:
“சுரங்கப்பாதை அமைக்க இதுவரை சுமார் 279 மனுக்கள் கொடுத்தும் முன்னேற்றம் இல்லை. சுரங்கப்பாதை இல்லாததால் இப்பகுதியில் 45 கிராம மக்கள் தினமும் அவதிக்கு ஆளாகின்றனர். ஆகையால், இந்தப் பிரச்சினை எங்களுக்கு வாழ்வாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளதால் இந்த முறை யாருக்கும் வாக்களிக்கமாட்டோம் என்பதை நோட்டாவாக பதிவு செய்வோம். இதுகுறித்து வீடு தோறும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளோம் அதற்காக தயாராகி வருகிறோம். வேட்பாளர்கள் யாரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள கிராமங்களுக்குள் நுழைய வேண்டாமென பேனர் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளோம். மீறினால் அதன்விளைவு பின்னர் தெரியும்” என்றார்.
பல ஆண்டுகால போராட்டத்துக்கு விடிவு ஏற்படுத்தும் விதமாக நிதி ஒதுக்கி கடந்த 7 ஆண்டுகளால கிடப்பில் தள்ளப்பட்டுள்ள இச் சுரங்கப்பாதை திட்டத்தை நிறைவேற்ற எந்த மக்கள் பிரதிநிதியும் முன்வரவில்லை என்பதுதான் இப்பகுதியினரின் கேள்வியாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT