Published : 23 Apr 2014 11:55 AM
Last Updated : 23 Apr 2014 11:55 AM

கன்னியாகுமரியில் ஜெயிக்கப் போவது யார்?

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெறும் கட்சி தான் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்பது குமரியை துரத்தும் சென்டிமென்ட்.அதனால் இந்த தொகுதியில் வெற்றி பெற அனைத்து கட்சிகளும் போட்டோ போட்டி போட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு முடிந்திருக்கின்றன. தொகுதி நிலவரம்:

பொன்.ராதா கிருஷ்ணன்

பா.ஜ.க சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் களத்தில் நிற்கிறார். தொகுதிக்குள் பா.ஜ.க கணிசமாக வாக்கு வங்கியை வைத்துள்ளது. சிறுபான்மை அமைப்புகள் இவருக்கு எதிராக இருப்பது இவரது பலவீனம். பா.ஜ.கவினர் இவர் வெற்றிக்காக சளைக்காமல் சுற்றி திரிவதும், மோடியின் பிரச்சாரமும், புது வாக்காளர்களும் இவருக்கு பலம் சேர்க்கின்றன. சிறுபான்மை இன மக்களின் வாக்குகள் சிதறுவதால் நம்பிக்கையுடன் சுற்றி சுழல்கிறார் பொன்னார்.

வசந்தகுமார்

தமிழக அளவில் காங்கிரஸின் ஒரே நம்பிக்கை தொகுதி. வழக்கமாக கிறிஸ்தவர்களையே களம் இறக்கும் காங்கிரஸ் கட்சியில் இருந்து இந்த முறை இந்து நாடார் சமூகத்தை சேர்ந்த வசந்தகுமார் களம் இறக்கப்பட்டுள்ளார். எனினும் சிறுபான்மை இன மக்களின் வாக்கு வங்கியையே பெரிதும் நம்பி நிற்கிறார். சி.எஸ்.ஐ. கிறிஸ்தவர்களின் ஆதரவு ஓரளவுக்கு சாதகமாக இருக்கிறது. வசந்தகுமாரின் மிகப் பெரிய பலம் வைட்டமின் `ப’.

குமரி மாவட்டத்தில் நிலவிய கோஸ்டிப் பூசல்களை சரி கட்டவே பெரிய தொகையை செலவு செய்தவர், தொடர்ந்து பணத்தை தண்ணீராய் செலவழித்து பா.ஜ.கவை மிரட்டி வருகிறார்.

எப்.எம்.ராஜரத்தினம்

தி.மு.கவின் மிகப்பெரிய பலம் சிறுபான்மையினரின் வாக்கு வங்கி தான். காங்கிரஸ் வேட்பாளர் அதை பங்கிட்டுக் கொள்வது தான் தி.மு.கவின் மிகப் பெரிய பலவீனம். தி.மு.கவுக்கு ஆதரவாக இருக்கும் இஸ்லாமியர்களில் ஒரு சிலர் தேர்தலுக்கு பின் திராவிடக் கட்சிகள் பா.ஜ.கவோடு கைகோர்க்கலாம் என்ற அச்சத்தில், ஆம் ஆத்மியின் மீது பார்வையை திருப்பியிருப்பதாகவும் ஒரு தகவல் அலையடிக்கிறது. இன்னொரு புறத்தில் குமரி மாவட்ட தி.மு.க., காங்கிரஸ் கட்சியிடம் விலை போய்விட்டது என்ற தகவலும் தொகுதி முழுவதும் அலையடிக்கிறது.

ஜான் தங்கம்

நாகர்கோவில், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குள் இருக்கும் ஓட்டு வங்கி பலம். அதே நேரத்தில் தொகுதிக்குள் இருக்கும் இந்துக்களின் பார்வை தாமரையை நோக்கி நகர்வது பின்னடைவு. வைட்டமின் ப புகுந்து விளையாடுகிறது. ஒவ்வொரு பூத்திற்கும் ஒன்றரை லட்சம் என்ற விகிதத்தில் பட்டுவாடா செய்யப்பட்டு, ஓட்டுக்கு 200 ரூபாய் வினியோகிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் நிர்வாகிகள் பணத்தை ஸ்வாகா செய்து விட்டனர். குமரி அ.தி.மு.க. தொண்டர்களின் லேட்டஸ் புலம்பல்... பணம் கிடைத்தும் பலன் இல்லையே! அமுக்கிட்டாங்களே...

ஏ.வி.பெல்லார்மின்

பலம், பலவீனம் இரண்டுமே இவரது எளிமை தான். ஆள்,படை,அம்பாரி திரட்டி செல்லும் வாக்காளர்களுக்கு மத்தியில் டூவிலரில் பின்னால் அமர்ந்து சென்று வாக்கு சேகரிக்கும் எளிமை மக்களை கவர்கிறது. முந்திரி,ரப்பர்,தோட்ட தொழிலாளர்களின் ஆதரவு இவரது பலம். ஆயர் பேரவை சார்பில் வினியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தில் ஆர்.சி. கிறிஸ்தவர்கள் கம்யூனிஸத்தை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. இதை நம்பி சுற்றி சுழன்றனர் தோழர்கள்.

உதயகுமார்

கன்னியாகுமரி தொகுதிக்குள் நோட்டாவின் வாக்குகளுக்கு வேலை இல்லாமல் செய்வார் என்ற பேச்சு தொகுதி முழுவதும் அலையடிக்கிறது. ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என்று கேட்பவர்கள் ஆம் ஆத்மியை நோக்கி நகர்வது இவரது பலம். கிராமப் புற மக்கள் மத்தியில் தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுக்கு இவர் தான் காரணம் என்பது போல் நிலவி வரும் பேச்சு வழக்கு இவரது பலவீனம். தொகுதிக்குள் லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் மீனவர் வாக்குகளும் இவரது பெரிய பலம்.

கடைசி கட்ட நிலவரப்படி பாரதிய ஜனதா, காங்கிரஸ் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x