Published : 12 Feb 2015 11:03 AM
Last Updated : 12 Feb 2015 11:03 AM
சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள உயிரி எரிவாயு மின்னுற்பத்தி நிலையம் வரும் 24-ம் தேதி முதல் செயல்படத் தொடங்குகிறது. இங்கிருந்து நாளொன்றுக்கு 2 மெகாவாட் மின்னுற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை நகரில் நாளொன்றுக்கு 5 லட்சம் டன் குப்பை சேருகிறது. இதைக் கருத்தில் கொண்டும், குப்பையில்லா சென்னை என்னும் பெரிய இலக்கை அடையும் நோக்கிலும், காய்கறிக் கழிவுகளில் இருந்து மின்னுற்பத்தி செய்யும் நிலையங்களை அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதன் தொடக்கமாக, மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் ‘நிசர்குனா’ (சாம்பலை உருவாக்காது, சூழலுக்கு உகந்தது) என்னும் தொழில்நுட்பத்தின் உதவி யுடன், புளியந்தோப்பில் உள்ள குப்பை மாற்று வளாகத்தில் திடக் கழிவுகளில் இருந்து மின்னுற்பத்தி செய்யும் ஆலையை மாநகராட்சி அமைத்துள்ளது.
அங்கு, நாளொன்றுக்கு 2 லட்சம் டன் கழிவுகளில் இருந்து 2 மெகா வாட் மின்னுற்பத்தி செய்ய திட்ட மிடப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான கழிவுகளை சென்னையில் உள்ள பெரிய ஓட்டல்களில் இருந்தும், அம்மா உணவகங்களில் இருந்தும் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.
சோதனை ஓட்டம்
காய்கறி, பழம், காய்கறித் தோல் கழிவுகள் மற்றும் உணவுக் கழிவுகள் மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு, அவை பெரிய கலனில் (மிக்ஸர்) முதலில் கொட்டி அரைக்கப்படும். அக்கலவை, முன்செரிமானி (ப்ரி-டைஜெஸ்டர்) என்னும் இயந் திரத்துக்கு அனுப்பப்படும். சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்படும் வெந்நீரை அதில் கலந்து ஒரு கரைசல் தயாரிக்கப்படும்.
அது குழாய் மூலமாக பிரதான செரி மானிக்கு அனுப்பப்படும். அங்கு ஆக்சிஜன் நீக்கப்பட்ட நிலையில், மீத்தேன், கார்பன் டை ஆக்ஸைடு, நீராவி போன்ற வாயு உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த வாயு, பின்னர், ஜெனரேட்டர் அறைக்கு அனுப்பப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த வாயு உருவானது போக செரிமானியில் மீதமுள்ள கழிவு, மாநகராட்சிப் பூங்காக்களுக்கு உரமாகப் பயன்படுத்தப்படும்.
இந்த மின்னுற்பத்தி நிலையத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக சோதனை ஓட்டம் நடந்துவருகிறது. அது தற்போது, அதிகாரப்பூர்வ செயல்பாட்டுக்குத் தயாராகிவிட்டது.
150 தெருவிளக்குகள்
இது குறித்து சென்னை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்ததாவது: சுமார் ரூ.40 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தை ஹாலந்து நாட்டின் ‘ஹியுபர்ட் யுரோ கேர்’ நிறுவனம் இயக்கி, பராமரிக்கும். தற்போது, நாளொன்றுக்கு 500 கிலோ காய்கறிக் கழிவு மூலம் மின்னுற்பத்தி செய்யப்பட்டு, அருகில் உள்ள 20 தெருவிளக்குகளுக்கு மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது.
இது முழுவதுமாக செயல்படும்போது, 2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும். அப்போது, இந்த ஆலை செயல்படுவதற்கான மின்சாரத்தை எடுத்துக் கொண்டு, 150 தெருவிளக்கு களுக்கு மின்சாரம் அளிக்கப்படும். தற்போது, சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இன்னும் சொற்ப அளவிலான பணிகள் உள் ளன. அதை முடித்து, வரும் பிப்ரவரி 24-ம் தேதி (ஜெயலலிதா பிறந்தநாள்) முதல் அதிகாரப்பூர்வமாக மின்னுற் பத்தியைத் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT