Published : 16 Feb 2015 08:43 AM
Last Updated : 16 Feb 2015 08:43 AM

நீலகிரியில் புலி தாக்கி பெண் இறந்த சம்பவம்: வனச்சரக அலுவலகங்கள் சூறை; வாகனங்கள் தீ வைத்து எரிப்பு

நீலகிரி மாவட்டம் பாட்டவயலில் பெண்ணை தாக்கிய புலியை சுட்டுக்கொல்ல வலியுறுத்தி, நெலாக்கோட்டை வனச்சரக அலுவலகத்தை மக்கள் சூறையாடினர். அங்கிருந்த ஐந்து வனத்துறை வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பாட்ட வயல் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரின் மனைவி மகா லட்சுமியை நேற்று முன் தினம், தேயிலை தோட்டத்தில் புலி அடித்துக் கொன்றது. இதை கண்ட மக்கள் சப்தம் போடவே அங்கிருந்து புலி தப்பியது.

இதனால் வன விலங்குகளிட மிருந்து பாதுகாப்பு தர வலியுறுத்தி, பாட்டவயல் மக்கள் மகாலட்சுமி உடலை பிதர்காடு சாலையில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். இந்நிலையில், மறியலில் ஈடுபட்ட மக்களிடம் நேற்று அதிகாலை இரண்டு மணி வரை மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இறந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என அவரிடம் மக்கள் வலியுறுத்தினர்.

முதற்கட்டமாக ரூ.3 லட்சம் உடனடியாக வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். ஆனால், இதை ஏற்க மறுத்த மக்கள், புலியை கொன்று காண்பித்தால் மட்டுமே சடலத்தை அப்புறப்படுத்த முடியும் என்று விடிய விடிய மறியலைத் தொடர்ந்தனர்.

மறியலில் ஈடுபட்ட மக்கள் நேற்று காலை, நெலாக்கோட்டை, பிதர்காடு, 9-வது மைல், 1-வது மைல் உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் கற்கள் மற்றும் மரங்களை போட்டு போக்குவரத்தை தடுத்தனர்.

நெலாக்கோட்டை வனச்சரகர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கற்களை எறிந்து சூறையாடினர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த கோவை வனப்பாதுகாவலர் அன்வர்தீன், தெற்கு வனக்கோட்ட வன அலுவலர் பத்ரசாமி மற்றும் சரகர்களின் 5 வாகனங்களை தாக்கி, தீயிட்டு கொளுத்தினர். இதில், அலுவலகத்தில் இருந்த பெண் காவலர் உள்ளிட்ட 6 காவலர்கள் மற்றும் வனக்காவலர்கள் காய மடைந்தனர்.

இந்நிலையில், நீண்ட இழு பறிக்கு பின்னர் மகாலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக, கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்தது.

தேடும் பணி

தற்போது வனத்துறையினர், அதிரடிப்படையினர் மற்றும் ஆயுதப்பிரிவு போலீஸார் மனித வேட்டையாடும் புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் கூறியது: ‘உயிரிழந்த பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். சடலம் அகற்றிய பின்னர் நிலைமை அமைதியாக உள்ளது. இதனால் 144 தடையுத்தரவு அமல்படுத்தும் அவசியம் ஏற்படவில்லை. புலியை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. புலி விரைவில் பிடிபடும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x