Published : 28 Feb 2014 09:09 AM
Last Updated : 28 Feb 2014 09:09 AM
சேலம் உள்பட 7 மக்களவைத் தொகுதிகளைப் பெறுவதில் தேமுதிக - பாமக இடையே பிரச்சினை நீடிப்பதால், பாஜக வுடன் தேமுதிக, பாமக கூட்டணி முடிவாவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கூட்டணி அமைப் பதில் தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இதில் தேமுதிக எந்தக் கூட்டணியில் சேரப் போகி றது என்பது பில்லியன் டாலர் கேள்வியாகத்தான் இதுவரை இருந்துவருகிறது.
ஒருபுறம் காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு, மறுபுறம் பாஜக தலைவர் களுடன் தொகுதி ஒதுக்கீடு குறித்து மறைமுகப் பேச்சுவார்த்தை என தனது கூட்டணி நிலையை தெளிவுபடுத்தாமல் அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்துகிறது தேமுதிக. இதனால் தேமுதிக தனது கூட்டணியில் வரும் என்று காத்திருக்கும் பாஜகவால் கூட்டணி முடிவை அறிவிக்கமுடியாமலும் தொகுதி பங்கீடு செய்ய முடியாம லும் தவித்து வருகிறது.
இந்நிலையில், பாஜக - தேமுதிக கூட்டணி ஏற்படுவதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
தேமுதிகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது பற்றி அக்கட்சி நிர்வாகிகளுடன் பாஜக தொடர்ந்து பேசி வருகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணனும் கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “கூட்டணி குறித்தும், தொகுதிப் பங்கீடு பற்றியும் தேமுதிக, பாமக நிர்வாகிகளுடன் பாஜக மூத்த தலைவர்கள் பேசி வருகின்றனர். மற்ற நிபந்தனைகள் எல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. குறிப்பிட்ட 7 மக்களவைத் தொகுதிகளை இருகட்சிகளும் கேட்பதால்தான் உடன்பாடு ஏற்படுவதில் இழுபறி நீடிக்கிறது” என்றார்.
“சேலம், தருமபுரி, கிருஷ்ண கிரி, ஆரணி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 7 மக்களவைத் தொகுதிகளை தங்களுக்குத் தான் ஒதுக்க வேண்டும் என்று தேமுதிகவும், பாமகவும் பாஜக வுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. இந்தத் தொகுதிகளில் தங்களுக்குத்தான் அதிக செல்வாக்கும், வெற்றிவாய்ப்பும் இருப்பதாக இரு கட்சிகளுமே சொல்கின்றன. எனவே, இந்தத் தொகுதிகளைப் பிரித்துக் கொடுப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக கூட்டணி உடன்பாடும் தள்ளிப்போகிறது என்று பாஜக தரப்பில் கூறப்படுகிறது.
இந்த 7 மக்களவைத் தொகுதிகளை ஒரு கட்சிக்கே ஒதுக்காமல், இரு கட்சிகளுக்கும் சமமாக ஒதுக்குவதென்று பாஜக முடிவெடுத்துள்ளது. அதுகுறித்து தேமுதிக, பாமகவிடமும் தெரிவித்திருக்கிறது. அதனை இருகட்சிகளும் ஒப்புக்கொள்ளும் நிலையில் இருக்கின்றன.
சில நாட்களில் தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடியும் என்றும் அதைத் தொடர்ந்து கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்” என்றும் பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித் தார். இதனிடையே “கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாகவும், யாருக்காகவும் பாஜக காத்திருக் காது” என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியிருப்பதிலிருந்து, கூட்டணி பற்றிய முடிவு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT