Published : 05 Apr 2014 12:00 PM
Last Updated : 05 Apr 2014 12:00 PM
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் அமைக்கப்பட உள்ள அனல் மின் நிலையத்தை இயற்கை வளங்கள் பாதிக்காத வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் பகுதியில் ரூ. 24 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அனல் மின் நிலையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த அனல் மின் திட்டம் அமைந்தால் அப்பகுதியின் இயற்கை வளம் மற்றும் நீர், மீன்பிடி தொழில் ஆகியவை பாதிக்கப்படும் என்பதால் அப்பகுதி மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் உச்ச நீதி மன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்நிலையில் செய்யூர் அனல் மின் திட்டம் அமைக்கப்பட உள்ள பகுதியின் இயற்கை வளங்களைக் குறித்த ஆய்வறிக்கை வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிடப்பட்டது.
ஆய்வு அறிக்கையை வெளியிட்டுப் பேசிய மும்பை இயற்கை வரலாறு சங்கத்தின் துணைத் தலைவர் ரவி செல்லம், “கடந்த 2012 ஆம் ஆண்டு மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் நடத்திய ஆய்வில் இந்தப் பகுதியில் இடம் பெயர்ந்து வரும் பறவைகளின் எண்ணிக்கை குறைவு என்ற தவறான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய அமைப்பின் சார்பில் நடத்திய ஆய்வில் இப்பகுதியில் 77 வகையான நீர்ப்பறவைகள் மற்றும் 8 பறவை வகைகள் கண்டறியப்பட்டன.
அனல் மின் நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்திற்கு அரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் காயல் நீர் பகுதியில் 24 வகையான நீர்வாழ் உயிரினங்கள் உள்ளன” என்றார். மெட்ராஸ் இயற்கை ஆர்வலர்கள் சங்கத்தின் தலைவர் சுதாகர் கூறுகையில், “இயற்கை வளங்களும் நாட்டின் பாரம்பரிய சின்னங்கள் ஆகும்.
செய்யூர் பொது மக்களின் இயற்கை வளம் மற்றும் பொருளாதாரத்தைப் பாதிக்கும் இந்தத் திட்டத்தை, இயற்கை வளங்கள் பாதிக்காத இடத்திற்கு மத்திய அரசு மாற்ற வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT