Published : 05 Feb 2015 09:59 PM
Last Updated : 05 Feb 2015 09:59 PM
தூத்துக்குடி மாவட்டத்தில் சேனைக்கிழங்கு பயிரில் நல்ல மகசூல் கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர்.
ஓட்டப்பிடாரம் வட்டத்தில் உள்ள குதிரைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சேனைக்கிழங்கு பயிரிட்டு வருகின்றனர். வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் சேனை பயிரிடப்படும். 8 மாதத்துக்கு பின்னர் ஜனவரி 15-ம் தேதிக்கு பின் அறுவடைக்கு வரும். கடந்த ஆண்டில் மாவட்டத்தில் குறிப்பாக ஓட்டப்பிடாரம் வட்டத்தில் சுமார் 150 ஏக்கரில் விவசாயிகள் சேனைக்கிழங்கு பயிரிட்டனர்.
நல்ல மகசூல்
வழக்கமாக பொங்கல் பண்டிகையையொட்டி சேனைக் கிழங்கு அறுவடை நடைபெறும். அதன்படி ஓட்டப்பிடாரம் வட்டத்தில் சேனைக்கிழங்கு அறுவடை கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு மகசூல் அதிகரித்துள்ளது. ஏக்கருக்கு சராசரியாக 16 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைத்துள்ளது. மேலும், இந்த ஆண்டு கிலோ ரூ. 20 வரை விற்பனையாவதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது.
நல்ல வரவேற்பு
குதிரைகுளம் கிராம விவசாயி ஆறுமுகசாமி கூறும்போது, ‘ 2.5 ஏக்கர் பரப்பில் சேனைக்கிழங்கு பயிரிட்டுள்ளேன். தற்போது அறுவடை நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சேனைக்கிழங்குக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் இந்த ஆண்டு கிலோ ரூ. 20 வரை விலை போகிறது.
சாகுபடி செய்யும் போது ஏற்படும் விதை கிழங்கு உள்ளிட்ட செலவுகள்தான் அதிகம். அதற்கு பிறகு இடையில் உரம், பூச்சிக் கொல்லி மருந்து போன்ற செலவுகள், மற்ற பயிர்களை ஒப்பிடும் போது சேனைக்கிழங்குக்கு மிக குறைவுதான்.
நல்ல லாபம்
ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய 1,400 கிலோ விதை கிழங்கு தேவை. பயிர் செழித்து வளர ஏக்கருக்கு 100 கிலோ யூரியாவை கடலை புண்ணாக்குடன் கலந்து இட்டேன். மற்றபடி வழக்கமான நீர்ப்பாய்ச்சலை தவிர வேறு பெரிய அளவில் செலவு எதுவும் இல்லை.
ஒரு ஏக்கர் சேனைக்கிழங்கு பயிரிட ரூ.40 ஆயிரம் வரை செலவாகியுள்ளது. ஏக்கருக்கு 16 ஆயிரம் கிலோ வரை விளைச்சல் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு நல்ல விலையும் கிடைப்பதால் நல்ல லாபம் கிடைத்துள்ளது’ என்றார் அவர்.
ஊட்டச்சத்து அதிகம்
தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஆர். ஆவுடையப்பன் கூறும்போது, ‘சேனைக்கிழங்கில் ஊட்டச்சத்து அதிகம். 100 கிராம் கிழங்கில் 330 கலோரி சக்தி கிடைக்கிறது. மேலும், சேனையில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் அதிகம் உள்ளன. 100 கிராம் கிழங்கில் 50- 56 மில்லி கிராம் கால்சியம், 18.24 சதவீதம் கார்போஹைட்ரேட் உள்ளது. மேலும், நல்ல கொழுப்பை அதிகரிக்கும் ஒமேகா- 3 கொழுப்பு அமிலம் மற்றும் வைட்டமின் ஏ, பி6 ஆகியவை சேனைக்கிழங்கில் மிகுதியாக உள்ளன.
2014-15-ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 150 ஏக்கர் பரப்பளவில் சேனைக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த சாகுபடி பரப்பை மேலும் அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் தோட்டக்கலைத்துறை மூலம் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்றார் அவர்.
சொட்டுநீர் பாசன வசதி
ஓட்டப்பிடாரம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சி.பழனிவேலாயுதம் கூறும்போது, ‘நல்ல பாசன வசதி உள்ள சிறு விவசாயிகள் கூட சேனைக்கிழங்கை பயிரிடலாம். விவசாயிகளுக்கு மானிய விலையில் சொட்டுநீர் பாசன வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து சேனைக்கிழங்கு சாகுபடி பரப்பை அதிகரிக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT