Published : 05 Apr 2014 10:18 AM
Last Updated : 05 Apr 2014 10:18 AM
மாநிலக் கல்லூரி மாணவர்களின் கோஷ்டி மோதலை தடுக்கச் சென்ற காவல் உதவி ஆணையர் கல்லால் தாக்கப்பட்டார். வன்முறையில் ஈடுபட்ட 8 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் 'கடல் தென்றல்' என்ற நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை நடந்தது. இதையொட்டி இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இசைக்குழு வில் உள்ளவர்கள் பாடல்களை பாடிக் கொண்டிருந்தனர். அப்போது கல்லூரி மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இரு பிரிவுகளாக பிரிந்து மோதலில் ஈடு படத் தொடங்கினர். ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.
இதையடுத்து, அங்கிருந்த மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. கோஷ்டி மோதல் பெரும் வன்முறையாக மாறியது. கொலை வெறியுடன் சிலரைத் தாக்கத் தொடங்கினர். ஒரு மாணவனை இருவர் பிடித்துக் கொள்ள, மற்றொருவர் பெரிய கல்லைத் தூக்கி அந்த மாணவன் தலையில் போட வந்தார். அதற்குள் அங்கு வந்த அண்ணா சதுக்கம் காவலர்கள், அந்த மாணவனைக் காப்பாற்றினர். பின்னர் மோதலில் ஈடுபட்ட மாணவர்களைப் பிடிக்கச் சென்றனர்.
அப்போது போலீஸாரையும் அவர்கள் கல்வீசி தாக்கத் தொடங்கினர். கல்லூரிக்குள் நடந்த மோதல் கடற்கரை சாலைக்கு வந்தது. சாலையிலும் கற்களை வீசியதால் வாகனங்களில் சென்றவர்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது. இதைப் பார்த்த திருவல்லிக்கேணி உதவி ஆணையர் பீர்முகமது, கல்வீசிய மாணவர்களை தடுக்கச் சென்றார். சில மாணவர்கள் அவரை குறி வைத்து கற்களை வீசித் தாக்கினர். இதில் அவரது தலை மற்றும் கைகளில் ரத்தக் காயம் ஏற்பட்டது.
நிலைமை கட்டுக்கடங்காமல் செல்லவே, போலீஸார் தடியடி நடத்தி மாணவர்களைக் கலைத்தனர். மோதலில் ஈடுபட்டதாக பாலாஜி, தமிழ்க்கொடி, மணிகண்டன், சந்தோஷ், ராஜா, அகஸ்டின், அரவிந்த், ரஞ்சித் ஆகிய 8 மாணவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT