Published : 27 Feb 2014 12:00 AM
Last Updated : 27 Feb 2014 12:00 AM

சுப.உதயகுமாரை சமாளிக்க அவரது முகாமிலிருந்தே வேட்பாளரை நிறுத்தும் திமுக

நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக சுப. உதயகுமார் அறிவித்துள்ள நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட ’கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் நிர்வாகியை நிறுத்த திமுக திட்டமிட்டுள்ளது.

’ஆம் ஆத்மி’ வேட்பாளராக சுப. உதயகுமார் கன்னியாகுமரி தொகுதியில் களமிறங்கினால், கடலோர கிராமங்களில் உள்ள பெரும்பான்மை மீனவர்கள் மற்றும் சிறுபான்மையினரின் ஆதரவு இவருக்கு இருக்கும் என்று கருதப்படுகிறது.

உதயகுமார் வரவால் மீனவர்கள் மற்றும் சிறுபான்மை இன மக்களின் ஓட்டுக்கள் பறிபோகும் என்று திமுக, அதிமுக கட்சிகள் பதறிப்போயுள்ளன. எனவே உதயகுமாருக்கு இணையான நபரை களமிறக்க திட்டமிடுகிறது திமுக.

திமுக சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் கிள்ளியூர் ஒன்றியச் செயலாளர் மனோ தங்கராஜ் அல்லது ராஜரத்தினம் போட்டியிடலாம். இருவருமே கட்சியில் விருப்ப மனு தாக்கல் செய்து நேர்காணல் முடித்துவிட்டு காத்திருக்கிறார்கள்.

மனோ தங்கராஜ் 1989-ம் ஆண்டில் பேச்சிப் பாறை அணை நீர் பாதுகாப்பு மற்றும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கி அணு உலைக்கு எதிராக போராடியவர். பின்னர் 2011-ல் இவர் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தைவிட்டு விலகினார்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய மனோ தங்கராஜ், “அணு உலை எதிர்ப்பு இயக்கத்தினர் திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்ததால் இயக்கத்திலிருந்து வெளியேறினேன். இப்போது திமுக-வில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் சுப.உதயகுமாரை எதிர்த்து வெற்றிபெறுவேன்” என்றார். அதேசமயம், கன்னியாகுமரி மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் ராஜரத்தினத்தை பரிந்துரை செய்துள்ளார். மனோ தங்கராஜும், கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் ஜான் தங்கமும் கல்லூரி நண்பர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.

இது குறித்து சுப.உதயகுமார் சார்பில் பேசிய மைக்கல் புஷ்பராயன், “ஆம் ஆத்மி சார்பில் தூத்துக்குடியில் நானும் திருநெல்வேலியில் மை.பா.ஜேசுராஜனும் போட்டியிட வேண்டும் என்று சொன்னாலும், நாங்கள் இறுதி முடிவு எடுக்கவில்லை. சுப.உதயகுமாரை எதிர்த்து மனோ தங்கராஜ் போட்டியிட்டால் நிலைமை கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். ஏனெனில் மனோ தங்கராஜும் இப்பகுதி மக்களிடம் பரிச்சயமானவர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x