Published : 21 Feb 2015 09:50 AM
Last Updated : 21 Feb 2015 09:50 AM

சிறப்பு பி.எட். ஆசிரியர்கள் நியமன அறிவிப்பில் குழப்பம்: பள்ளிக் கல்விச் செயலருக்கு கடிதம்

மாற்றுத் திறன் மாணவர்களின் கல்விக்காக சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பில் நிலவும் குழப்பத்தை தெளிவுபடுத்துமாறு பள்ளிக் கல்வித் துறை செயலருக்கு சிறப்பு பிஎட் பட்டதாரிகள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

அனைத்து மாவட்ட சிறப்பு கல்வியியல் பட்டதாரிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.வடிவேல் முருகன் தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறன் மாணவர்களின் கல்விக்காக 202 சிறப்பு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித் துறை கடந்த 13-ம் தேதி உத்தரவிட்டது. ஆனால், சிறப்பு ஆசிரியர் பணியிடம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பில் குழப்பம் உள்ளது.

அந்த அறிவிப்பில் பார்வை குறைபாடு, காது கேட்கும் திறன் குறைபாடு மாணவர்கள் என இரு குறைபாடுகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மன வளர்ச்சி குறைபாடு, உடலியக்க குறைபாடுடைய மாணவர்களுக்கான ஆசிரியர்கள் குறித்து தெரிவிக்கப்படவில்லை. இதை பள்ளிக் கல்வித் துறை தெளிவுபடுத்த வேண்டும்.

குறைபாடு வாரியாக முக்கியத்துவம் வழங்கி, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தர பணியிடத்தில் சிறப்பு பிஎட் பட்டம் பெற்றவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத் திறன் மாணவர்களுக்கு கல்வியுடன், பயிற்சியும் அளிக்க வேண்டும். தமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 வரை மனநலம் பாதித்த 1,092 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களுக்கு பயிற்றுவிக்க தனியாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக அறிவிப்பில் கூறப்படவில்லை.

தற்போது நிரப்பப்பட உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடங்களில் ஏற்கெனவே ஐஇடிஎஸ்எஸ், எஸ்எஸ்ஏ திட்டங்களில் பணிபுரிந்துவரும் தகுதிபெற்ற சிறப்பு பிஎட் பட்டதாரிகளை நியமிக்கவும், எஞ்சிய இடங்களில் பிற சிறப்பு பிஎட் பட்டதாரிகளை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x