Published : 14 Feb 2015 10:30 AM
Last Updated : 14 Feb 2015 10:30 AM

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம்: சின்ன சேலத்தில் 21-ம் தேதி நடக்கிறது

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பெறுவதற்கான முகாம் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தில் வரும் 21-ம் தேதி நடக்கிறது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையும், விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும் இணைந்து சின்னசேலத்தில் வரும் 21-ம் தேதியன்று நடத்தும் வேலைவாய்ப்பு முகாமில் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமும் பங்கேற்கவுள்ளது. இந்த முகாமின் மூலம் வெளிநாட்டில் பணிகளை பெற பதிவு செய்துகொள்ளலாம்.

குவைத் நாட்டிலுள்ள இந்திய தொலைத்தொடர்புத் துறையில் பணிபுரிய டிப்ளோமா தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம் பெற்ற சிவில் மேற்பார்வையாளர்கள், 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 வருடம் பணி அனுபவம் கொண்ட கொத்தனார்கள் மற்றும் சமையல்காரர்கள், தொடக்கப்பள்ளி தேர்ச்சியுடன் 5 வருடம் அனுபவம் பெற்ற லேபர்கள், 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருடம் பணி அனுபவம் பெற்ற ரிக்கர் பணி தெரிந்த லேபர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் கொண்ட குவைத் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள 50 வயதுக்குட்பட்ட வாகன ஓட்டுநர்கள், சிவில் பிரிவில் டிப்ளோமா தேர்ச்சி பெற்று 5 வருட அனுபவம் கொண்ட ஆட்டோகேட் நிபுணர்கள் போன்றவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன.

சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைக்கு 2 வருட பணி அனுபவம் கொண்ட 55 வயதுக்குட்பட்ட அலோபதி மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். மேலும் பி.எஸ்.சி. / எம்.எஸ்.சி. தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் கொண்ட 32 வயதுக்குட்பட்ட செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். செவிலியர்களுக்கான நேர்காணல்கள் புது டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் கொச்சியில் வரும் 17, 22 மற்றும் மார்ச் 4-ம் தேதிகளில் நடக்கவுள்ளன.

தகுதியான நபர்கள் சுய விவரங்களுடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றுடன் ஒரு புகைப்படத்தை இணைத்து தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் ovemclsm@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களை பெற 044-22502267/ 22505886/ 08220634389 என்னும் தொலைபேசி எண்களையும், www.omcmanpower.com என்ற இணையதளத்தையும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x