Published : 22 Apr 2014 12:00 AM
Last Updated : 22 Apr 2014 12:00 AM
சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன் இந்தத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அவர் 'தி இந்து' வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி.
திடீரென்று கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு கொடுத்திருப்பதற்கு காரணம் என்ன?
மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தோழர்கள் கை கோத்து களத்தில் நிற்பதுதான் காரணம். இருவரும் இணைந்து இரண்டு ஆகவில்லை. அருகருகே இணைந்து நின்று 11 ஆகியுள்ளார்கள். கட்சி உடைந்தது சரியல்ல. உயிர் போகல... ஆனா, கம்யூனிஸ்டுகள் நிலைமை தொண்டைக்கும் நெஞ்சுக்குமாய் இழுத்துக் கொண்டிருந்தது. மீண்டும் இருவரும் இணைந்திருப்பதன் மூலம் இடதுசாரிகள் புதுத்தெம்பு பெற்றிருக்கிறார்கள். இது தான் சந்தோஷம். தேர்தலில் வெல்வதை விட்டு தள்ளுங்கள். ஆனால், தேசத்தில சுத்தமான அரசியல் இயக்கம் கம்யூனிஸ்ட்தான்.
மக்களவைத் தேர்தலில் மட்டுமில்லாமல் வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் கம்யூனிஸ்டுகள் இதே போல் இணைந்து பயணிப்பார்களா?
இருவரும் இனிமேல் இணைந்துதான் பயணத்தை தொடரவேண்டும். இல்லாவிட்டால் அழிந்து போய்விடுவார்கள். கிராமத்தில் கோபத்தில சொல்ற மாதிரி, “நாசமா போய்டுவாங்க”. இணைந்த சந்தர்ப்பத்தை விட்டால் அவ்வளவுதான். இங்கதான் நல்லகண்ணு, சங்கரய்யா அப்படின்னு பல நல்ல தலைவர்கள் உண்டு.
அரசியல் கட்சிகளுக்கு நடிகர், நடிகை, எழுத்தாளர்கள் பிரச்சாரம் செய்ததுபோல் நீங்களும் மேடையேறி பிரச்சாரம் செய்யவில்லையே?
மேடையேற மாட்டேன். பலர் அப்படி இருக்காங்க. ஜெயகாந்தன் மேடையேறி பேசியிருக்கார். எழுதிட்டு போறதுதான் விருப்பம். அவங்க பார்க்குற வேலை மூலமாகவே நம்ம விருப்பத்தை செய்யலாம். இங்கு, எழுதி சம்பாதிக்கும் எழுத்தாளர் ரொம்ப குறைவுதான். எழுத்தாளர்கள் ஒவ்வொருத்தரும் விமர்சித்து பேசுவோம். அதுதான் உண்மையான ஜனநாயகம்.
தேர்தல் முறைகளில் மாற்றம் தேவையா?
தேர்தலில் வாக்கு என்பது விஷயமல்ல. ஐந்து வருடத்துக்கு ஒரு முறை நம்மை அரசியல்வாதிகள் சந்திக்க வருகிறார்கள். அந்த கால இடைவெளி ரொம்ப அதிகமா இருக்கு. 3 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடத்த யாரும் ஒத்துக்க மாட்டாங்க. 4 வருடத்துக்கு ஒருமுறை தேர்தல் நடந்தால் நல்லாயிருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.
இளைஞர்களிடம் தேர்தலைப் பற்றிய பார்வையில் மாற்றம் தெரிகிறதா?
தேர்தலை விடுங்க. இளைஞர்களை சமூகத்தின் பக்கம் திரும்ப விடாம வைச்சிருக்காங்க. முக்கியமா மது, சினிமா, டிவின்னு வரிசையா சொல்லலாம். அதை விட்டா படிப்பு, முதல் மதிப்பெண். அவர்களை எதைப் பற்றியும் சிந்திக்க விடுவதில்லை. சுலபமா ஏமாந்து போறவங்களாதான் இளைஞர்கள் இருக்காங்க. விளையாடக்கூட விடுவதில்லை. வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை கத்துக்காம கஷ்டப்படுறாங்க. இதில் தேர்தலைப் பற்றி ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்க அவர்களுக்கு நேரம் இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.
மீண்டும் இருவரும் இணைந்திருப்பதன் மூலம் இடதுசாரிகள் புதுத் தெம்பு பெற்றிருக்கிறார்கள். இதுதான் சந்தோஷம். தேர்தலில் வெல்வதை விட்டு தள்ளுங்கள். ஆனால், தேசத்தில சுத்தமான அரசியல் இயக்கம் கம்யூனிஸ்ட்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT