Published : 19 Feb 2015 01:29 PM
Last Updated : 19 Feb 2015 01:29 PM

ஜெ. பற்றி பேசியதால் அமளி: பேரவையில் வெளியேற்றப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு சஸ்பெண்ட்

பேரவைத் தலைவரை முற்றுகை யிட்டு கடும் அமளியில் ஈடுபட்டதால், தேமுதிக உறுப்பினர்கள் நடப்புக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ் பெண்ட் செய்யப்பட்டனர். இப்பிரச் சினையை உரிமைக் குழுவுக்கு அனுப்பவும் பேரவைத் தலைவர் ப.தனபால் உத்தரவிட்டார்.

சட்டப்பேரவையில் நேற்று ஆளு நர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர் மானத்தின் மீது விவாதம் நடந்தது. இதில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் மோகன்ராஜ் பேசும்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி ஒரு கருத்தைத் தெரிவித்தார். அதற்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர் கள் அனைவரும் எழுந்து கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். பதிலுக்கு தேமுதிக உறுப்பினர்களும் கூச்சலிட் டனர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

பேரவைத் தலைவர் ப.தனபால்: எதிர்க்கட்சி துணைத் தலைவர், மக்களின் முதல்வர் பற்றி பேசியது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. அதுபோல பேசுவது முறையல்ல. அப்படிப் பேசுவதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை.

அப்போது ஆளுங்கட்சி உறுப் பினர்கள் எழுந்து, மோகன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உரக்கப் பேசினர். அவர்களை உட்காரும்படி கேட்டுக்கொண்ட பேரவைத் தலைவர், ‘‘உறுப்பினர் மோகன்ராஜ் அமைதியாக பேச வேண் டும். விரும்பத்தகாத முறையில் பேசி னால், அவையில் இருந்து வெளி யேற்ற நேரிடும்’’ என தெரிவித்தார்.

ஆனால், மோகன்ராஜை தொடர்ந்து பேச அனுமதிக்கக்கூடாது என்று ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். பதிலுக்கு தேமுதிக உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர். இதையடுத்து அவை நடவடிக்கைக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக கூறி, உறுப்பினர் மோகன்ராஜை வெளி யேற்றுமாறு அவைக் காவலர் களுக்கு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். காவலர்கள் உள்ளே வந்து மோகன்ராஜை வெளியேற்ற முயன்றனர்.

இதைக் கண்டித்து, தேமுதிக கொறடா சந்திரகுமார் உள்ளிட்ட சிலர் பேரவைத் தலைவர் இருக்கையை நோக்கி வேகமாக சென்றனர். அவர் களை அவைக் காவலர்கள் தடுத் தனர். காவலர்களைத் தள்ளிக் கொண்டு தேமுதிகவினர் முன்னேறி னர். அப்போது தேமுதிக உறுப்பினர் களுக்கும், அவைக் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் அவைக் காவலரின் தொப்பி கீழே விழுந்தது.

இந்த அமளியில் பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் அமர்ந்திருந்த இருக்கை மற்றும் மேஜை, பேரவைத் தலைவரின் முன்பிருந்த மேஜை தள்ளிவிடப்பட்டன. அதிலிருந்த காகி தங்கள், ஆவணங்கள் வீசப்பட்டன. பேரவையே அமளிதுமளியாக காட்சியளித்தது.

இதையடுத்து தேமுதிக உறுப் பினர்கள் அனைவரையும் வெளியேற் றும்படி அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் தனபால் உத்தர விட்டார். அதன்படி, தேமுதிகவினரை காவலர்கள் வெளியேற்றினர். அதன்பிறகு பேரவை வராண்டாவில் அமர்ந்து பேரவைத் தலைவர் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக தேமுதிகவினர் கோஷ மிட்டனர். அங்கிருந்தும் அவர்களை வெளியேற்ற பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.

பேரவைத் தலைவர்: என்னையும், அவைக் காவலர்களையும் தாக்க முற்பட்ட தேமுதிக உறுப்பினர்களின் செயலை வன்மையாக கண்டிக் கிறேன். அவர்களது செயலால் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அவைக்கு தலைக்குனிவு ஏற்பட் டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்திவிட்டனர். இப்பிரச்சினை குறித்து விவாதித்து முடிவெடுக்க இந்த விவகாரத்தை உரிமைக் குழுவுக்கு அனுப்புவது குறித்தும், தேமுதிக உறுப்பினர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை கள் குறித்தும் அவை முன்னவர் தெரிவிக்க வேண்டும்.

அவை முன்னவர் நத்தம் விஸ்வ நாதன்: தேமுதிக உறுப்பினர்களின் அராஜகத்தை பிற எதிர்க்கட்சியினர் கண்கூடாகப் பார்த்தார்கள். பேரவைத் தலைவரின் இருக்கையை தள்ளி நாசப்படுத்திவிட்டனர். ஆவணங்களை வீசி எறிந்தனர். தேமுதிக கொறடா சந்திரகுமார் பேரவைத் தலைவரை நோக்கி கொலை வெறித்தாக்குதல் நடத்தச் சென்றார். அப்போது அவரைத் தடுத்த அவைக் காவலர்களின் தொப்பியை பிடுங்கி எறிந்து தாக்க முற்பட்டார். மேஜையில் இருந்த புத்தகங்கள், ஆவணங்களை வீசியெறிந்ததை அனைவரும் பார்த்தனர். வரலாற்றுப் பெருமைமிக்க இந்த அவையின் மரபுக்கு மாறாக நடந்துகொண்ட தேமுதிக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை இந்தக் கூட்டத் தொடர் மட்டுமல்லாமல், அடுத்த கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அதற்கான தீர்மானத்தை கொண்டு வருகிறேன்.

அவை முன்னவரின் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு

தேமுதிக உறுப்பினர்களை சஸ் பெண்ட் செய்து தீர்மானம் நிறை வேறிய பிறகு சட்டப்பேரவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, “பேரவை எடுத்த முடிவு பற்றி பேச விரும்பவில்லை. தேமுதிக உறுப்பினர்களை இந்தக் கூட்டத் தொடர் மட்டுமல்லாமல் அடுத்த கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து அளிக்கப்பட்ட தண்டனையை குறைப்பது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து சற்று நேரத்தில், ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு பதிலாக, நடப்பு கூட்டத் தொடர் மட்டும் தேமுதிக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்யும் வகையில் திருத்தப்பட்ட தீர்மானம் கொண்டு வரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற் றப்பட்டது. மேலும், அவை முன்னவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இந்த விவகாரத்தை உரிமைக் குழுவுக்கு அனுப்ப பேரவைத் தலைவர் ப.தனபால் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x