Published : 05 Feb 2015 11:00 AM
Last Updated : 05 Feb 2015 11:00 AM
தமிழகத்தில் திணடுக்கல், நாமக்கல், சேலம், கரூர், தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார மாவட்டங்களில் புல்லாங்குழல், உருமி, உடுக்கை, தவில், பம்பை, சத்தகுழல் உள்ளிட்ட மரபு இசைக் கருவிகள் வாசிக்கும் கலைஞர்கள் உள்ளனர்.
பாதுகாக்க வேண்டியவை
மரபு இசைக் கருவிகளில் தொன்மையும், பாரம்பரியமும்மிக்க புல்லாங்குழல் மனிதர்களை மட்டுமின்றி, விலங்குகளையும் தன்வயப்படுத்தும் வல்லமை படைத்தவை. ஆனால், நவீன எலக்ட்ரானிக் இசைக் கருவிகள் வருகையால் புல்லாங்குழல் உள்ளிட்ட மரபு இசைக் கருவிகள் மறைந்து வருவதாகவும், இந்த இசைக் கருவிகளையும், இவற்றைத் தயாரிப்போரையும் பாதுகாக்க வேண்டும் என்றும் மரபு இசைக் கருவிகள் பற்றி 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்துவரும் திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் ஓ.முத்தையா தெரிவித்தார்.
அவர் ‘தி இந்து’-விடம் கூறிய தாவது:
“மரபு இசைக் கருவிகள் காதுகளின் வழியாக ஊடுருவி இதயத்தை வருடுகின்றன. ஒரு காலத்தில் நம்மை மெய்மறக்கச் செய்த புல்லாங்குழலை தற்போது அருங்காட்சியகத்தில்கூட காண்பது அரிதாக இருக்கிறது. கம்பளத்து நாயக்கர் இன மக்கள் புல்லாங்குழல் வாசித்தே மேய்ச்சலின்போது ஐந்தறிவு விலங்குகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். வயலை மேய வந்த யானையே மயங்கும் அளவுக்கு இவர்கள் புல்லாங்குழல் வாசித்துள்ளனர் என சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்பு ஆடு, மாடுகளை மேய்த்தபோது பொது இடங்களில் ஏகாந்தமாக புல்லாங்குழல் வாசித்தனர். தற்போது பொது இடத்தில் வாசிப்பதில்லை. வழிபாட்டு நேரத்தில் மட்டுமே வாசிக்கின்றனர்.
மூச்சு, பேச்சு உள்ளவர்களே நீளமான புல்லாங்குழல் வாசிக்க முடியும். வாசிப்போருக்கு நல்ல ஆரோக்கியமான இதய ரத்த ஓட்டம் கிடைப்பதால், நூறு ஆண்டுகள் வரை வாழ்ந்தனர். தற்போது மூச்சுபிடித்து ஊதுவதற்கு இளைஞர்கள் தயாரில்லை. அதனால் இப்போது 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் வாசிக்கின்றனர்.
மூங்கில் புல்லாங்குழல் கொடுக்கக்கூடிய இனிமையான இசையை நவீன எலக்ட்ரானிக் இசைக் கருவிகள் கொடுப்பதில்லை. தற்போது இசையமைப்பாளர்கள் நவீன எலக்ட்ரானிக் இசைக் கருவிகளையே நாடுவதால் புல்லாங்குழல் பயன்பாடு மறைந்து வருகிறது. தற்போது விரல்விட்டு எண்ணும் அளவுக்கே புல்லாங்குழல் தயாரிப்போர் இருக்கின்றனர். இதனால், புல்லாங்குழலுக்கு கிராக்கி ஏற்பட்டு, ஒரு புல்லாங்குழல் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்கப்படுகிறது” என்றார்.
புல்லாங்குழல் தயாரிக்க 48 நாள்
புல்லாங்குழல் தயாரிக்கும் வெள்ளைச்சாமி என்பவர் கூறியது: “மலைக்குச் சென்று எந்நேரமும் தண்ணீர் விழுந்து கொண்டிருக்கிற விளைந்த மூங்கில்களை வெட்டி எடுத்து வந்து 48 நாட்கள் பக்குவப்படுத்தி புல்லாங்குழல் தயாரிக்கிறோம். புல்லாங்குழல் வாங்குவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே ஆர்டர் கொடுக்க வேண்டும். அனைத்து நாட்களிலும் சென்று மூங்கில் எடுத்துவர மாட்டோம். நல்ல நாள், நேரம் பார்த்து 2, 3 நாட்கள் மலையில் தங்கியிருந்து எந்த மூங்கில் இசை தரும் என்பதை நேரில் பார்த்து கணித்து வெட்டி எடுத்துவந்து புல்லாங்குழல் தயாரிக்கிறோம்.
ஒரு புல்லாங்குழல் செய்வதற்கு 48 நாட்கள் ஆகிறது. வெட்டி எடுத்து வரும் மூங்கில்களை முதலில் எரு குழிக்குள் 10 நாட்கள் வரை புதைத்து வைப்போம். எருவில் நிறைய பூச்சிகள் இருக்கும். மூங்கில் தரமாக இருந்தால் அந்த பூச்சிகள் மூங்கிலை சாப்பிடாது. பூச்சிகள் சாப்பிடாத மூங்கிலைக் கொண்டுமட்டுமே புல்லாங்குழல் தயாரிப்போம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT