Published : 04 Feb 2014 12:00 AM
Last Updated : 04 Feb 2014 12:00 AM
அமைச்சர் நத்தம் விசுவநாதனின் ஆளுமைக்குள் உள்ள திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் அவரது மருமகன் கண்ணனுக்குத்தான் அதிமுகவில் இம்முறை சீட் என்கிறார்கள். அதேசமயம், திமுக முகாமில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் போட்டிக்கு வராமல் ஜகா வாங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
கண்ணனுக்கு சீட் நிச்சயம்
திண்டுக்கல் தொகுதியில் அதிமுக-வும் திமுக-வும் சம பலத்தில் இருந்தாலும் அதிகாரம் கையில் இருப்பதாலும் கூட்டணி இதுதான் என்று முடிவாகிவிட்ட தாலும் அதிமுக முகாம் சுறுசுறுப்படைந்துள்ளது.
மருமகன் கண்ணன் விருப்ப மனு அளித்துள்ள நிலையில், அவரை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்ற நோக்கில் அரசின் இலவசப் பொருட்களை 75 சதவீதம் வரை விநியோகித்து முடித்துவிட்டார் விசுவநாதன்.
இவரது எம்.பி. கனவுக்கு வேட்டு வைக்கும் விதமாக விசுவநாதன் மீதும் கண்ணன் மீதும் தலைமைக்கு புகார் மனுக்களை எழுதித் தள்ளி இருக்கிறது எதிர்க் கோஷ்டி. ஆனாலும் கண்ணனுக்கு சீட் நிச்சயம் என்கிறது விசுவநாதன் கோஷ்டி.
கண்ணனைத் தவிர முன்னாள் எம்.பி-க்களான குமாரசாமி, திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.பால சுப்பிரமணியத்தின் மகன் டாக்டர் பரமசிவம் உள்ளிட்டவர்களும் விருப்பமனு அளித்துள்ளனர்.
மகனை ஒதுக்கிவிட்ட ஐ.பி.
அதிமுக தரப்பில் கண்ணன் போட்டியிட்டால் அவரை எதிர்க்க திமுக தரப்பில் சரியான நபர் முன்னாள் அமைச்சர் ஐ.பெரிய சாமியின் மகன் செந்தில்குமார்தான் என்றும் அவர்தான் திமுக வேட்பாளர் என்றும் பரவலாகப் பேச்சு அடிபட்டது.
ஆனால், ஏற்கெனவே பழநி சட்டமன்ற தொகுதியில் தோல்வியை தழுவிய நிலையில் மீண்டும் ஒரு தோல்வியை தழுவினால் மகனின் அரசியல் எதிர்காலம் பாதிக்கும் என கருதிய பெரியசாமி, அவரை போட்டியிலிருந்து ஒதுங்க வைத்து விட்டாராம். செந்தில்குமாருக்காக விருப்ப மனு கூட கொடுக்கப்படவில்லை.
இதனால் திமுக முகாமில் லேசான தேக்கம் தெரிகிறது. அதிமுக-விலிருந்து திமுக-வுக்கு வந்த முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜனை விருப்ப மனு கொடுக்க வைத்திருக்கிறார் பெரியசாமி.
இவரைத் தவிர பழநி சேர்மன் வேலுமணி, திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளிட்டவர்களின் பெயரும் பரிசீலனையில் இருப்ப தாகச் சொல்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT