Last Updated : 25 Feb, 2015 09:08 AM

 

Published : 25 Feb 2015 09:08 AM
Last Updated : 25 Feb 2015 09:08 AM

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளர் யார்? - கோவையில் இன்று தொடங்கும் மாநாட்டில் தேர்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது மாநில மாநாடு கோவையில் இன்று தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது. இதில், கட்சியின் புதிய மாநிலச் செயலாளர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் அதன் கிளை அமைப்புகள் தொடங்கி, அகில இந்திய அமைப்பு வரை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநாடு நடத்தப்படும். இதில், கட்சியின் முந்தைய செயல்பாடு, அடுத்து வரும் 3 ஆண்டுகளில் எப்படி செயல்படுவது என்பது பற்றி விவாதிக்கப்படும்.

அந்த வகையில் தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை, ஒன்றிய, மாவட்ட அளவிலான மாநாடுகள் நடந்து முடிந்துள்ளன. மாநில மாநாடு கோவையில் இன்று தொடங்குகிறது. 28-ம் தேதி வரை 4 நாட்கள் இந்த மாநாடு நடக்கிறது. இதையடுத்து, அகில இந்திய மாநாடு, புதுச்சேரியில் அடுத்த மாதம் நடக்கிறது.

கட்சி அமைப்புகளின் நிர்வாகிகள் மாநாடுகளில்தான் தேர்வு செய்யப்படுகின்றனர். நிர்வாகிகளின் பதவிக்காலம் பற்றி கட்சி விதியின் 32-வது பிரிவில் வரையறை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலச் செயலாளராக ஒருவர் தொடர்ந்து 2 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும். 2 முறைக்கு மேல் ஒருவர் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட வேண்டுமானால், அதற்கு மாநிலக் குழுவில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, நான்கில் 3 பங்குக்கு குறையாமல் ஆதரவு கிடைத்தால் மட்டுமே, 3-வது முறை செயலாளர் பதவிக்கு அவரால் போட்டியிட முடி யும்.

தற்போதைய மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் 2005-ம் ஆண்டில் முதல்முறையாக மாநிலச் செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். 2008-ம் ஆண்டு புதுக்கோட்டையில் நடந்த மாநில மாநாட்டில் அவரே செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த மாநில மாநாட்டில் (2012) மாநிலச் செயலாளர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததாலும், மாநிலக் குழு ஒருமித்த அடிப்படையில் ஆதரவு தெரிவித்ததாலும் தா.பாண்டியன் 3-வது முறையாக மாநிலச் செயலாளர் ஆனார்.

இந்த சூழலில் கட்சியின் 23-வது மாநில மாநாடு கோவையில் இன்று தொடங்குகிறது. தற்போது மாநிலச் செயலாளர் பதவிக்கு போட்டி இருப்பது உறுதியாகி உள்ளது. தற்போதைய மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன், முன்னாள் மக்களவை உறுப்பினர் திருப்பூர் சுப்பராயன் ஆகியோர் போட்டியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தா.பாண்டியன் மீண்டும் போட்டியிட விரும்பினால், அதற்கு மாநிலக் குழுவில் நான்கில் 3 பங்கு உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் தரவேண்டும்.

அப்படி ஒப்புதல் கிடைத்து விட்டால் தா.பாண்டியனுக்கும், சி.மகேந்திரனுக்கும் இடையே போட்டி இருக்கும் என்றும் ஒருவேளை தா.பாண்டியனுக்கு ஒப்புதல் கிடைக்காவிட்டால் சி.மகேந்தி ரனுக்கும், திருப்பூர் சுப்பராயனுக்கும் இடையே போட்டி இருக்கும் என்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x