Published : 16 Feb 2015 08:24 AM
Last Updated : 16 Feb 2015 08:24 AM

நாடு முழுவதும் காஸ் மானிய திட்டத்தில் 10 கோடி பேர் சேர்ப்பு: நுகர்வோர் வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் கோடி

நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் நேரடி மானிய திட்டத்தில் இணைந்துள்ளனர் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஒசி) தெரிவித்துள்ளது.

காஸ் சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாக நுகர் வோரின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இண்டேன், இந்துஸ் தான், பாரத் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தும் நுகர்வோர்களின் எண்ணிக்கை மொத்தம் 14 கோடியே 45 லட்சத்து 893 ஆக உள்ளது. இவர்களில் தற்போது 10 கோடியே 55 லட்சத்து 263 பேர் நேரடி மானிய திட்டத்தில் இணைந்துள்ளனர்.

காஸ் பயன்படுத்தும் அனைத்து நுகர்வோர்களையும் இத்திட்டத்தில் இணைக்க எண்ணெய் நிறு வனங்கள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாட்டில் கர்நாடக மாநிலம் மைசூரில்தான் அதிகளவில் நுகர்வோர்கள் இத் திட்டத்தில் இணைந்துள்ளனர். இங்கு காஸ் பயன்படுத்தும் நுகர் வோர்கள் மொத்தம் 5 லட்சத்து 73 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் நேரடி மானிய திட்டத்தில் இணைந்து இருக்கிறார்கள். அதேபோல் ஒரிசா மாநிலத்தில் பவுதா என்ற பகுதியில் மிகக் குறைந்த அளவாக 9 ஆயிரம் நுகர்வோர்கள் மட்டுமே காஸ் இணைப்பு வைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேரடி மானிய திட்டத்தில் இணைந்து இருக்கிறார்கள்.

தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 51 லட்சம் நுகர்வோர்கள் உள்ளனர். இவர்களில் 1 கோடியே 6 லட்சம் பேர் திட்டத்தில் இணைந் துள்ளனர். திட்டத்தில் சேர்ந்த பின்பு சிலிண்டர் பதிவு செய்த நுகர்வோர்களுக்கு முன்பணம் மற்றும் மானிய தொகை சேர்த்து சுமார் ரூ.313.27 கோடி நுகர்வோர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

நேரடி எரிவாயு மானிய திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்பு மாநிலத்தில் சுமார் 3 லட்சம் பேர் மானிய சிலிண்டர் வேண்டாம் என ரத்து செய்துவிட்டனர். அதேபோல் போலி எரிவாயு இணைப்பு வைத்திருந்த சுமார் 3 லட்சம் பேரின் எரிவாயு இணைப்பு முடக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மானிய விலையில் காஸ் சிலிண்டர்கள் வாங்கும் நுகர்வோர்கள் அனைவரையும் நேரடி மானிய திட்டத்தில் இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் மார்ச் மாத இறுதிக்குள் இத்திட்டதில் 100 சதவீதம் நுகர்வோர்களை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x