Published : 08 Feb 2015 03:14 PM
Last Updated : 08 Feb 2015 03:14 PM
குளச்சல் அருகேயுள்ள கொட்டில்பாடு கிராமத்தில் “சுனாமி” ஏற்படுத்திய வலி அதிகம். இக்கிராமத்தில் மட்டும் 200-க்கும் அதிகமான மரணங்கள். ஆண்டுகள் கடந்துவிட்டாலும் இன்றைக்கும் சோகம் நிழலாடுகிறது பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில்.
எனினும், சுனாமிக்கு தன் நான்கு குழந்தைகளையும் பறிகொடுத்த ஆக்னஸ், இப்போது மூன்று குழந்தைகளுக்கு தாயாக நம்பிக்கை அவதாரம் எடுத்துள்ளார். ஆக்னஸ் நம்மிடம் கூறும்போது, `சுனாமிக்கு முன் எங்கள் வாழ்க்கை ரொம்பவே சந்தோஷமா போச்சு. எங்களுக்கு அருண் பிரமோத் (8), பிரதீமா (6), பிரதீஷா (4), ரஞ்சிதா (2) ஆகிய நான்கு குழந்தைகள் இருந்தனர். ஆழிப்பேரலை இந்த நான்கு பிஞ்சுங்க உசுரையும் பறிச்சுடுச்சு’ என்று கண்கலங்கினார்.
சொந்த கட்டுமரம்
`எனக்கு 19 வயசுலயே கல்யாணம் முடிஞ்சுருச்சு. சுனாமிக்கு முந்தைய நாள் தான் என் வீட்டுக்காரர் சொந்தமா ஒரு கட்டுமரம் வாங்குனாங்க. குடும்பத்தோட அதில் ஏறி கடலுக்குள் சுற்றி பார்த்தோம். அடுத்தநாள் இவ்வளவு பெரிய ஆபத்து வரும்னு நினைச்சு கூட பார்க்கலை.
சுனாமி அன்னிக்கு காலைல குழந்தைகளுக்கு பூரி சுட்டு கொடுத்தேன். என் வீட்டுக்காரர் தொழில் விஷயமா தூத்தூர் போயிட்டாரு. கொஞ்ச நேரத்தில் ஊரில் இருக்குறவங்க சத்தம் போடுற சலசலப்பு கேட்டுச்சு. ஊருக்குள்ள ஏதோ சண்டை நடக்குதுன்னு நினைச்சுகிட்டு குடிசையை விட்டு வெளியே வரல.
சுனாமி
அடுத்த சில நொடிகளிலேயே வீட்டுக்குள் வந்த அலையில் குடிசை இடிஞ்சு விழுந்துடுச்சு. என்னோட நாலு குழந்தைகளையும் இரண்டு கையிலும் இறுக்கமா பிடிச்சுகிட்டு உட்கார்ந்திருந்தேன். தண்ணீர் திரும்பி கடலுக்குள் போனப்ப என் நாலு பிள்ளைகளையும் கடல் மாதா பறிச்சுட்டாங்க. நான் குழந்தைகளை தேடுறதுக்குள்ள அடுத்து வந்த ஒரு பெரிய அலை வீட்டில் இருந்த என்னை காயல், ரோடு, வயலையும் தாண்டி ஒரு பனை மரத்துல போய் போட்டுருச்சு. அதை பிடிச்சு கொஞ்ச நேரம் தொங்கினேன். பின்னர் பக்கத்தில் இருந்த புதரில் விழுந்துட்டேன்.
பெற்ற நாலு பிள்ளைகளும் இறந்ததை நினைத்து பல தடவை தற்கொலைக்கு முயற்சி பண்ணிருக்கேன். குடும்பநல அறுவை சிகிச்சையை ரத்து செஞ்சு, மறுபடியும் குழந்தை பெத்துக்கலாம்னு அரசாங்கத்தில் இருந்து கவுன்சிலிங் கொடுத்தாங்க. நம்பிக்கை இல்லாமல்தான் மறு ஆபரேசன் செஞ்சேன். இப்ப மூணு குழந்தைங்க இருக்காங்க. முதல் இரண்டும் சுகப்பிரசவம் தான். மறுபடியும் குடும்பநல அறுவை சிகிச்சை பண்ணிக்கிட்டேன்.
இறந்து போன பிரதீஷா, பிரதீபா, அருண் பிரமோத் நினைவாக இந்த குழந்தைகளுக்கு ஆரோக்கிய பிரதீஷா (9), ஆரோக்கிய பிரதீபா (8), ஆரோக்கிய பிரமோத்(7) என பேரு வச்சுட்டோம்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT