Published : 21 Feb 2015 12:02 PM
Last Updated : 21 Feb 2015 12:02 PM

பெரம்பலூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு விநியோகிக்கப்பட்ட காலாவதியான இணை உணவு

பெரம்பலூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் இலவச இணை உணவு பாக்கெட்டுகள் காலாவதியானவை என புகார் எழுந்துள்ளது.

கருவுற்ற மகளிர் மற்றும் பாலூட்டும் பெண்களுக்காக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணித் திட்டத்தின் கீழ், இந்த இணை உணவுகள் மாதம் 2 முறை அங்கன்வாடி மையங்கள் வாயிலாக வழங்கப்பட்டுவருகின்றன. இந்த உணவு பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டுள்ள அவற்றின் உபயோக காலம் கடந்த பிறகும் அவை அலட்சியமாக கர்ப்பிணி, பிரசவித்த பெண்களுக்கு விநியோகிக்கப்படுவதாக பெரம்பலூர் மாவட்டத்தில் புகார் எழுந்துள்ளது.

அவ்வாறு வழங்கப்பட்ட இணை உணவு பாக்கெட்டுகளின் மாதிரி ‘தி இந்து’வின் பார்வைக்கு கிடைத்தது. 2 கி.கி. எடையுள்ள அந்த இணை உணவின் தயாரிப்பு தேதி செப்.2014 என்றும் 2015, ஜன.31-க்குள் அதனை உபயோகித்துவிடுவது நல்லது என்றும் உறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உணவு பாக்கெட்டுகளைப் பெற்ற கர்ப்பிணிகளில் ஒருவரான லெப்பைக்குடிக்காடு பகுதியில் வசிக்கும் முகமது ஃபாரூக் மனைவி ஆரிஃபா கூறியபோது, “ஜமாலியா நகர் அங்கன்வாடி மையத்தில் இந்த இணை உணவுகளை பிப்.18-ம் தேதியன்று பெற்றேன். என்னுடன் ஏராளமான கர்ப்பிணி பயனாளிகள் இதை வாங்கிச் சென்றார்கள்.

வீட்டில் வந்து பார்க்கும்போதுதான் தேதி காலாவாதியானது தெரிந்தது. நான் நிறைமாத கர்ப்பிணி என்பதால் வீட்டிலிருப்பவர்கள் இந்த உணவை சாப்பிட அனுமதிக்கவில்லை. “காலாவதியாகி 20 நாள்தானே ஆகிறது” என்று உணவு பாக்கெட் பெற்ற வேறு சில கர்ப்பிணிகள் அதனை சாப்பிடுவதாகக் கேள்விப்பட்டேன். இது தொடர்பாக அதிகாரிகளின் விளக்கம் கிடைத்தால் நல்லது” என்றார்.

இதுகுறித்து மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஸ்வரியிடம் கேட்டபோது, “இதுபோன்ற புகார் எதுவும் எனக்கு இதுவரை வரவில்லை. இருந்தாலும், இதுதொடர்பாக உடனடியாக விசாரிக்கிறேன். கர்ப்பிணிகள் தங்களுக்கான இணை உணவு பாக்கெட்டுகளை பெறும்போதே காலாவதி தேதி சரிபார்த்து வாங்குவது நல்லது. தற்போதைக்கு காலாவதியான பாக்கெட்டுகள் எவரிடமாவது இருந்தால் உடனடியாக தங்களுக்கான அங்கன்வாடி மையங்களில் அவற்றை திருப்பித்தந்துவிட்டு வேறு புதிய பாக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x