Published : 16 Feb 2015 11:50 AM
Last Updated : 16 Feb 2015 11:50 AM

கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ. 2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க கோரிக்கை

கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கவேண்டும் என, திருவள்ளூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் 7-வது மாவட்ட மாநாடு, நேற்று கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடந்தது. கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சிங்காரவேலு, மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில தலைவர் விஜயன், சி.ஐ.டி.யு., மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம், செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தீர்மானங்கள்

நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், ஓய்வு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கவேண்டும். பெண் தொழிலாளிக்கு 50 வயதில் ஓய்வூதியம் வழங்கவேண்டும். பண பயன்களுக்கான கேட்பு மனுக்களை 2 மாதத்துக்குள் பரிசீலித்து, பண பயன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில், உறுப்பினர் பதிவுக்கு வங்கி நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சரிபார்ப்பு உள்ளிட்ட நடைமுறைகளை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், மாவட்ட தலைவராக நாகராஜ், செயலாளராக வடிவேலு, பொருளாளர் லட்சுமணன், துணை தலைவர்களாக ராதாகிருஷ்ணன், முனுசாமி, சாந்தி, துணை செயலர்களாக பாலாஜி, வேலன், கணேசன், விஜயகுமார், சுப்ரமணி, சுசீலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x