Published : 25 Apr 2014 12:46 PM
Last Updated : 25 Apr 2014 12:46 PM

தனுஷ்கோடி அருகே இலங்கை கடற்படை முகாம்: அச்சத்தில் தமிழக மீனவர்கள்

தனுஷ்கோடிக்கு அருகே 7-வது மணல் திட்டில் இலங்கையின் புதிய கடற்படை முகாம் ஒன்றை நிறுவியுள்ளதாக வெளியாகி உள்ள தகவலை அடுத்து தமிழக மீனவர்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள கடற் பகுதியில் 13 மணல்திட்டுகள் உள்ளன. இதில் முதல் ஆறு மணல் திட்டுகள் இந்திய கடல் எல்லைக்குட்பட்டது ஆகும். 7-வது மணல் திட்டிலிருந்து 13-வது மணல் திட்டுவரையிலும் இலங்கைக்கு சொந்தமான கடல் பகுதியாகும். இந்த மணல் திட்டுக்கள் பகல் நேரங்களில் கடல் நீர்வற்றி மணல் திட்டுகளாகவும், இரவு நேரங்களில் கடல் நீர் சூழ்ந்தும் காணப்படும்.

தனுஷ்கோடிக்கு வெகு அருகாமையில் உள்ள இலங்கைக்கு சொந்தமான 7-வது மணல் திட்டில் இலங்கை புதிய கடற்படை முகாம் ஒன்றை அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 7வது மணல் திட்டில் அமைந்துள்ள இலங்கை கடற்படை முகாமில் 24 மணி நேரமும் இலங்கை கடற்படையினர் நிலை கொண்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த இலங்கை கடற்படையினரின் புதிய கடற்படை முகாமினால் தமிழக மீனவர்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

இது குறித்து மீனவர் பிரநிதி ஒருவர் நமது செய்தியாளரிடம் கூறியதாவது,

இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்திற்கு வெகு அருகாமையில் 2010ஆண்டிலேயே கச்சத்தீவில் சீனாவின் உதவியுடன் தங்களின் கடற்படை முகாமினை நிறுவிவிட்டார்கள். தற்போது 7வது மணல் திட்டிலும் புதிய கடற்படை முகாமினை அமைத்துள்ளனர். ஆனால் அதே நேரம் இந்தியாவின் எல்லைப் பகுதியான தனுஷ்கோடியில் எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நிறுவாமல் உள்ளது.

முன்னதாக பாக்ஜலசந்தி கடற்பரப்பு இலங்கை கடற்படையினரால் மீனவர்களின் உயிருக்கு உத்திரவாதமில்லாத உள்ளது. தற்போது ராமேஸ்வரத்திற்கு அருகில் கச்சத்தீவிலும், தனுஷ்கோடிக்கு அருகே 7வது மணல் திட்டிலும் இலங்கை கடற்படையினரின் முகாம்கள் அமைத்துள்ளதால் தமிழக மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் மீனவர்களின் உயிருக்கு எவ்விதமான உத்திரவாதமும் இல்லை, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x