Published : 22 Feb 2015 11:57 AM
Last Updated : 22 Feb 2015 11:57 AM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-வது மாநில மாநாடு, சென்னையில் கடந்த 16-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடந்தது. இதில் அதிமுக, திமுகவை விமர்சித்தும், மாற்றுக் கொள்கைகள் குறித்தும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் மாநிலச் செயலாளராக ஜி.ராமகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், மாநாட்டு தீர்மானம் குறித்து ‘தி இந்து’வுக்கு ஜி.ராமகிருஷ்ணன் அளித்த சிறப்புப் பேட்டி:
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் மாநாட்டு தீர்மானத்தில் விமர்சித்துள்ளீர்களே?
பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பான அணுகுமுறையில் திமுக, அதிமுக இடையே எந்த வேறுபாடும் இல்லை. பெரியாருக்குப் பிறகு சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளை இரு கட்சிகளுமே கைவிட்டுவிட்டன.
கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் பெருமளவில் தனியார்மயமாகி விட்டன. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 1,500 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் இங்கு மாறி மாறி ஆட்சி செய்யும் திமுக, அதிமுக கட்சிகள்தான் காரணம்.
திமுக, அதிமுகவுக்கு நீங்கள் எப்படி மாற்று சக்தியாக இருக்க முடியும்?
இந்த இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் மின் வாரியம் நலிவடைகிறது. மின் கட்டணம் உயர்த்தப் படுகிறது. ஆனால், மின் கட்டணத்தை உயர்த்தாமலேயே வாரியத்தின் நஷ்டத்தை குறைக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும் பல மாற்று திட்டங்களை முன்வைக்கி றோம். அரசுப் பள்ளிகளை வலுப்படுத்துவதன் மூலம் ஏழைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதற்கான மாற்று திட்டங்கள் பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம்.
விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவும், விவசாயத்தை யும் விவசாயத் தொழிலையும் பாது காக்க ஏராளமான திட்டங்களை கூறுகிறோம். மக்கள் நலன் சார்ந்த மாற்றுத் திட்டங்களும், கொள்கை களும் எங்களிடம் இருப்பதால் நாங்கள்தான் மக்களுக்கான மாற்று சக்தி என்று கூறுகிறோம்.
சரியான மாற்று திட்டங்களை வைத்திருந்தாலும் மக்களின் அங்கீ காரம் உங்களுக்கு கிடைக்காதது ஏன்?
இதுபற்றி எங்கள் மாநாட்டிலும் விவாதிக்கப்பட்டது. மக்கள் பிரச்சினைகளையும் அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் அவர்களிடம் மேலும் நெருக்கமாகச் சென்று பேச வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளோம். அந்த வகையில் தமிழகம் முழுவதும் எங்களது மாற்றுக் கொள்கைகளைக் கொண்ட லட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்களுடன் ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களை சந்திக்க முடிவு செய்துள்ளோம். ஏப்ரலில் இந்த மக்கள் சந்திப்பு இயக்கம் நடக்கவுள்ளது.
ஆம் ஆத்மியை ஏற்றுக்கொண்ட அளவுக்கு கம்யூனிஸ்ட்களை மக்கள் ஏற்றுக்கொள்ளாததற்கு என்ன காரணம்?
ஆம் ஆத்மியை விட எங்களிடம் சிறந்த கொள்கைகள் உள்ளன. எனினும், ஊழலுக்கு எதிராக மக்களிடம் மேலோங்கியுள்ள கோப உணர்வுகளை டெல்லி தேர்தலில் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள ஆம் ஆத்மியால் முடிந்துள்ளது. அங்கு வீடு வீடாகச் சென்று, ஒவ்வொரு தனி மனிதரையும் சந்தித்து அவர்கள் பிரச்சாரம் செய்தனர். அதனால்தான் ஊழல் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக இவ்வளவு பெரிய வெற்றியை மக்கள் கொடுத்துள்ளனர்.
இந்தப் பிரச்சார உத்திகள் பற்றி ஆம் ஆத்மியிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளன. எங்கள் கட்சியைப் பொருத்தமட்டில் எளிமையும், நேர்மையும் எங்கள் ரத்தத்தில் ஊறித் திளைத்தவை. இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், ஜோதிபாசு, நிருபன் சக்கரவர்த்தி உட்பட எங்கள் கட்சியைச் சேர்ந்த 8 பேர் மாநில முதல்வர்களாக இருந்துள்ளனர். இவர்களில் யாருக்கு எதிராகவும் ஒரு சிறிய ஊழல் குற்றச்சாட்டுகூட எழுந்ததில்லை.
எனவே, ஊழலுக்கு எதிரான உணர்வுள்ள மக்களிடம், ஊழலை ஒழிப்பது பற்றி பேச எங்களுக்கு முழு தகுதி உள்ளது. இந்த உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தால் நிச்சயம் கம்யூனிஸ்ட்களை அங்கீகரிப்பார்கள். அதற்கான பணிகளை நாங்கள் செய்வோம்.
பொதுவாக இன்றைய அரசியல்வாதிகள் பற்றி மக்களிடம் உள்ள மதிப்பீடு என்ன?
கடந்த 1968-ம் ஆண்டில் இந்திய மாணவர் சங்கத்திலும், 1969-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் உறுப்பினராக சேர்ந் தேன். அரசியலில் ஈடுபடுவது என்பது மக்களுக்கு சேவை செய்வதற் காகவே என்று இருந்த காலம் அது. ஆனால் இன்று பணம் சம்பாதிப்ப தற்காகவே பலரும் அரசியலுக்கு வருகின்றனர். எங்கும் ஊழல் தலை விரித்தாடுகிறது. இதனால் அரசியல் என்றாலே மக்கள் முகம் சுளிக்கின்றனர்.
இந்தச் சூழலில் பொதுவாழ்வில் எளிமையையும், தூய்மையை யும் தூக்கிப்பிடிக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தேவை நாட்டுக்கு மிகவும் அவசியமாக உள்ளது. மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்து, தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மிக வேகமாக வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT