Published : 11 Feb 2015 09:25 AM
Last Updated : 11 Feb 2015 09:25 AM

அதிமுக அழைப்புக்காக காத்திருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன்

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., அதிமுகவில் இணைவதற்காக நான்கு மாதங்களுக்கு முன்பே கடிதம் கொடுத்துவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு காரணங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் திமுக பிரபலங்கள் அரசியலில் தங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள, அதிமுக தலைமைக்குத் தூதுவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், தேமுதிகவை விட்டு விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுகவில் இணைந்தபோதே அனிதா ராதாகிருஷ்ணனும் அதிமுகவுக்குத் தூது அனுப்பினார். மதுரை அதிமுக மேயர் ராஜன் செல்லப்பாவின் வழிகாட்டுதலின்படி கடந்த செப்டம்பர் 20-ம் தேதிக்கு முன்பே அதிமுக தலைமைக்கு கடிதம் கொடுத்திருக்கிறார் அனிதா.

இதுகுறித்து அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளரும் திமுக முன்னாள் பொதுக்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் புதுக்கோட்டை செல்வம் ‘தி இந்து’விடம் கூறியதாவது: அனிதா ராதாகிருஷ்ணன், நான், தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ‘பில்லா’ஜெகன் மூவரும் அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து கடிதம் கொடுத்திருப்பது உண்மைதான். திமுகவில் அனிதாவும் அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டார்கள். மு.க.அழகிரியால் திமுகவுக்கு அழைத்துவரப்பட்ட அனிதாவை, மாவட்டச் செயலாளர் என்.பெரிய சாமியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தனக்குப் பிறகு மகனும் மகளும் கட்சிக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைத்த பெரியசாமி, அதற்காக அனிதாவை திட்டமிட்டு ஓரங்கட்டினார். சட்ட பேரவைத் தேர்தலில் அனிதாவை தோற்கடிக்க அவர்கள் செய்த சதியையும் மீறி அவர் வெற்றி பெற்றார். திமுக எம்.எல்.ஏவான அனிதா மீது, திமுக நகரச் செயலாளர் ஒருவரையே விட்டு கொலை மிரட்டல் புகார் கொடுக்க வைத்தார்கள்.

கட்சிக்குள் தனக்கு நேர்ந்த அவமானங்களை அவர் தலைமைக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திமுகவுக்கு இப்போது அடிமைகள் மட்டுமே தேவை என நினைக்கிறார்கள். அதனால்தான் கட்சி நடவடிக்கைகளை விட்டு ஒதுங்க ஆரம்பித்தார் அனிதா. அவர் அதிமுகவுக்குப் போகப் போகிறார் என்ற செய்தி பரவியதும் திமுக தலைமையிலிருந்து தொடர்பு கொள்ள முயற்சித்தார்கள். ஆனால், யாரிடமும் அனிதா பேசவில்லை.

அதிமுகவுக்கு செல்வதற்காக தயாராக இருக்கிற அனிதா, அழைப்பு வந்தால் கிளம்பிவிடுவார். அதற்கு முன்பாக தேவையற்ற சிக்கல்கள் வராமல் இருக்கவே மீடியாக்களிடம் பேசுவதை தவிர்க்கிறார்’ இவ்வாறு தெரிவித்தார் செல்வம்.

அனிதாவைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் பழநிமாணிக்கம், ரகுபதி, முத்துச்சாமி, சத்தியமூர்த்தி, முல்லைவேந்தன், திருச்சி செல்வராஜ் உள்ளிட்டவர் களையும் அதிமுகவுக்கு இழுக்க அக்கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x