Published : 21 Feb 2015 10:36 AM
Last Updated : 21 Feb 2015 10:36 AM

சிவனுக்கு சாமரம் வீசும் காவிரி நங்கையின் அரிய சிற்பம் கண்டுபிடிப்பு: கும்பகோணம் அருகே ஆய்வில் தகவல்

கும்பகோணம் அருகேயுள்ள மானம்பாடி கைலாசநாதர் கோயிலில் சிவனுக்கு சாமரம் வீசும் காவிரி நங்கையின் அரிய சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் - சென்னை நெடுஞ்சாலையில் கும்பகோணத்திலிருந்து எட்டாவது கிலோ மீட்டரில் இருக்கிறது மானம்பாடி. இங்குள்ள கைலாசநாதர் கோயில் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்டது. இங்கே காவிரி நங்கையின் அரிய சிற்பம் இருப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சிற்பத்தைக் கண்டுபிடித்திருக்கும் வரலாற்று மற்றும் கலையியல் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் ’தி இந்து’விடம் கூறியதாவது: பொன்னி நதி என்று அழைக்கப்படும் காவிரியானது கரிகாற்சோழ பேராறு, தென்னகத்து கங்கை என்றும் சோழர் கால கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கரிகாலன் கட்டிய கல்லணை இப்பேராற்றில் திகழ்வதோடு இதன் துணை நதியான வெண்ணாற்றில் கட்சமங்கலம் என்ற ஊரில் மிகப்பெரிய தடுப்பணையையும் கட்டியிருக்கிறான் கரிகாலன். இது இந்தியாவின் மிகப் பழமையான தடுப்பணை.

சைய மலையிலிருந்து வெளிப்படும் காவிரி தமிழகத்தில் ஓடி கடலில் கலக்கும் காட்சி திருவலஞ்சுழி கோயிலில் மூலிகை ஓவியமாக வரையப்பட்டுள்ளது. தாராசுரம் கோயிலில் இடுப்பளவுக்கு நீர்ச்சுழியாகவும் இடுப்புக்கு மேலே அழகிய நங்கையாகவும் திகழும் அழகிய காவிரி அன்னையின் சிற்பம் உள்ளது. திருச்சேரை என்ற ஊரில் சாரபுட்கரணி குளத்தருகே காவிரித் தாய்க்கு சோழர் காலத்தில் எழுப்பப்பட்ட தனிக் கோயில் இன்றளவும் வழிபாட்டில் உள்ளது. காவிரி பாயும் சோழநாட்டில் காவிரி தாய்க்கு உள்ள ஒரே கோயில் இதுதான்.

கங்கைகொண்ட ராஜேந்திர சோழன் காலத்தில் ராஜ ராஜேச்சுரபுரம் என்னும் ஊரில் திருபுவன மாதேவி ஏரிக்கரையில் காவிரி நதிக்கு ஒரு கோயில் இருந்ததாக அம்மன்னனின் கரந்தை செப்பேடுகள் சொல்கின்றன. இப்போது, மானம்பாடி சிவாலயத்தில் காவிரி நங்கையின் அரிய சிற்பம் நமக்குக் கிடைத்திருக்கிறது. இக்கோயிலின் மதுர தோரணம் (மாடத்துக்கு மேலே உள்ள சிற்ப அலங்கார வேலைப்பாடு) ஒன்றில் இந்தச் சிற்பம் காணக் கிடைத்திருக்கிறது.

வெண் நாவல் மரத்தின் கீழ் உள்ள சிவலிங்கத்தை யானை ஒன்று மலர் தூவி பூஜிப்பது போலவும் அதனருகே ஒரு கையில் சாமரத்துடன் இன்னொரு கையை உயர்த்தி ஈசனை போற்றும் வகையில் காவிரி நங்கை நிற்பது போலவும் சிற்பம் உள்ளது. இச்சிற்பக் காட்சி திருச்சி திருவானைக்கா தலவரலாற்றின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் நடராஜர் சிலைக்குக் கீழே ராஜேந்திர சோழன் தேவியுடன் அமர்ந்திருக்கும் காட்சியும் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளாக காவிரியை பெண்ணாக போற்றும் மரபு இருந்து வருகிறது. சோழ நாட்டில் பல திருக்கோயில்களில் கங்கை, யமுனை நதிப் பெண்கள் சிவனுக்கு சாமரம் வீசும் ஓவியங்களும் சிற்பங்களும் காணப்படும் நிலையில் சிவனுக்கு காவிரி நங்கை சாமரம் வீசும் இந்தச் சிற்பம் நமக்குக் கிடைத்திருக்கும் அரிய வரலாற்றுப் பொக்கிஷம்.

இதன் அடுத்த கட்டமாக, காவிரியின் தொடக்கமான தலைக் காவிரியிலிருந்து கடலில் கலக்கும் பூம்புகார் வரை மலர்ந்த கலை இயல் சிறப்புகள் குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு தெரிவித்தார் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x