Published : 28 Feb 2015 10:06 AM
Last Updated : 28 Feb 2015 10:06 AM
கடந்த கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை தபால்காரர் என்பவர் எல்லோராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட கதாநாயகர்.
இவை எல்லாம் மறக்க முடியாத சிறந்த காலக்கட்டம் அது. அப்போது இந்தியாவின் சிறந்த அஞ்சல் அலுவலகமாக கொடைக்கானல் அருகேயுள்ள செண்பகனூர் கிளை அஞ்சல் அலுவலகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்குக் காரணம், அந்த அலுவலகத்தில் பணியாற்றிய போஸ்ட் மாஸ்டர் (கிளை அஞ்சலக அதிகாரி) கே.வி. பீட்டர்.
தொடக்கத்தில், கொடைக்கானல் மலைவாழ் மக்களிடையே கிறிஸ்தவ மத போதகராகத்தான் வாழ்க்கையைத் தொடங்கினார் கே.வி.பீட்டர். அடர்ந்த மலைப் பகுதியான செண்பகனூர் அஞ்சல் அலுவலகத்துக்கு போஸ்ட்மாஸ்டராக பணிபுரிய யாருமே முன்வராதபோது, 1913-ல் தனது 27-வது வயதில் சேவை அடிப்படையில் பணியில் சேர்ந்தார் கே.வி.பீட்டர். அந்த ஒரே அலுவலகத்தில் 95 வயது வரை அதாவது 68 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்தார்.
இதுகுறித்து தேசிய விருது பெற்ற முன்னாள் அஞ்சல் அலுவலர் கோவை என். ஹரிஹரன் ‘தி இந்து’ விடம் கூறும்போது, ‘பேருக்குத்தான் கே.வி.பீட்டர் செண்பகனூர் அஞ்சல் அதிகாரி. ஆனால், அங்கு அவர்தான் போஸ்ட் மாஸ்டர், தபால்காரர், அலுவலக எழுத்தர், விற்பனையாளர் என எல்லாம். இப்போதுதான் கொடைக்கானல் சர்வதேச கோடைவாசஸ்தலம்.
அப்போது, கொடைக்கானல், செண்பகனூர் பகுதிகள் மக்கள் நடமாட்டமே இல்லாத அடர்ந்த மலைப்பிரதேசமாக இருந்தன. கரடுமுரடான மலைப் பாதையில் நடந்துதான் அலுவலகத்துக்கு வர வேண்டும். நடந்து சென்றுதான் தபால்களை பட்டுவாடா செய்ய வேண்டும். அப்போது, கொடைக்கானல் செண்பகனூர் பகுதியில் ஆங்கிலேய அரசின் உயர் அதிகாரிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நிரந்தரமாகவும், மாதக்கணக்கிலும் தங்கியிருப்பர். ஆங்கிலேயருக்கு ஏராளமான தபால்கள் வரும். அவர்களும் தபால், மணியார்டர்களை வெளியூர்களுக்கு அனுப்புவர்.
கே.வி.பீட்டர் தனி ஆளாக, தனது முழு சக்தியையும் அஞ்சல் துறைக்காகவே செலவிட்டார். தபால்களை அவரே பிரிப்பார்; பட்டுவாடா செய்வார்.
நேரம், காலம் பாராமல் திருமணம் செய்து கொள்ளாமலே அஞ்சல் அலுவலகத்தையே வாழ்க்கையாக நினைத்தார். அன்றைய காலக்கட்டத் தில் ஓராண்டில் 16 ஆயிரம் ரூபாய்க்கு தபால்தலைகளை விற்று சாதனை படைத்தார் (கிளை அஞ்சல் அலுவலக வரலாற்றில் அப்போதைய சாதனை). அதனால், செண்பகனூர் அஞ்சல் அலுவலகத்தை 1983-ல் இந்தியா வின் சிறந்த அஞ்சல் அலுவலகமாக மத்திய அரசு அறிவித்தது.
இதற்கு காரணமான கே.வி.பீட்டருக்கு மத்திய அரசு பத்ம விருது வழங்கி கவுரவித்தது. ஓய்வே இல்லாமல் பணிபுரிந்த அவருக்கு, அவரது 62-வது வயதில் 62 நாட்கள் முழு ஊதியத்துடன் அஞ்சல் துறை விடுமுறை வழங்கியது. அஞ்சல் துறை மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டை பாராட்டி, ஆயுட்காலம் வரை அங்கேயே பணிபுரிய கே.வி.பீட்டருக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
அதனால், 95 வயது வரை அங்கேயே பணிபுரிந்த அவர், முதுமை காரணமாக ஓய்வு பெற்றார்.
10 ரூபாய்க்கு பணியில் சேர்ந்த கே.வி.பீட்டர், 210 ரூபாய் ஊதியம் வாங்கும்போது ஓய்வுபெற்றார். ஆனாலும், 105-வது வயதில் தான் இறக்கும்வரை செண்பகனூர் அஞ்சல் அலுவலகத்தை தன் கண்காணிப்பிலேயே வைத்திருந் தார். சமூக அமைப்புகள் உதவிய தால், கே.வி.பீட்டர் ஊதியத்தை எதிர்பார்க்காமல் வாழ்நாள் முழுவ தும் கடைசி மூச்சு வரை தபால் துறைக்காக வாழ்ந்தார்’’ என்றார்.
சிறந்த அலுவலகமாக தேர்வு செய்யப்பட்ட செண்பகனூர் கிளை அஞ்சல் அலுவலகம். (உள்படம்) கே.வி.பீட்டர்.
இந்திரா காந்தியின் பாராட்டுக் கடிதம்
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவரது உதவியாளர் மூலம் கே.வி.பீட்டருக்கு அனுப்பிய பாராட்டுக் கடிதத்தில், ‘சாதாரண பணியிலும் ஒருவரால் திறம்படச் செயல்பட முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறீர்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 1946-ல் தகவல் தொடர்புத் துறை அரசு செயலராக இருந்த கிருஷ்ணபிரசாத், கே.வி.பீட்டரின் சேவையைப் பாராட்டி தங்க கைகடிகாரத்தை பரிசாக வழங்கினார்.
கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள், அலுவல் நிமித்தமாக கொடைக்கானல் செல்லும் அஞ்சலக அதிகாரிகள், இன்றும் செண்பகனூர் அஞ்சல் அலுவலகத்தை சுற்றுலாத் தலம்போல பார்வையிட்டுச் செல்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT