Published : 05 Feb 2015 08:33 AM
Last Updated : 05 Feb 2015 08:33 AM

மின் வாரியத்தில் ஓய்வுக்கு பிறகும் பணியாற்றும் 60 சிறப்பு அதிகாரிகள் பதவி விலக உத்தரவு: சிறப்பு பணியிடங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு

மின் வாரியத்தில் ஓய்வுக்கு பிறகும் சிறப்பு அதிகாரிகளாக பணியில் நீடிக்கும் 60 பேர், இம்மாத இறுதிக்குள் ஒட்டுமொத்தமாக பதவியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக மின் வாரியத்தில் தொழில் நுட்பம், நிதி, மின் உற்பத்தி, விநி யோகம், பணியாளர் நிர்வாகம், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுமார் 90 ஆயிரம் பேர் பணியாற்று கின்றனர். சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மட்டும் அதிகாரிகள் உட்பட 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர்.

நீண்டகாலமாக வாரியத்தில் பணி நியமனங்கள் இல்லாத நிலையில், கடந்த திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, ஓய்வுபெற்ற சிலருக்கு பணி சிறப்பு அதிகாரி பணி வழங்கப்பட்டது. துறை உயரதிகாரிகள், செயலக அதிகாரிகள், அமைச்சரவை அலு வலகத்தினர் ஆகியோர் பரிந்துரை யின் பேரில் பலர் ஓய்வுக்கு பிறகு மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டு சிறப்பு அதிகாரிகளாக பணியாற்றி வந்தனர்.

மின் வாரிய திட்டப்பிரிவில் தலைமைப் பொறியாளர்கள் அந்தஸ்தில் சசிகுமார், நரசிம்மன், கணபதி சங்கர், மின் கொள்முதல் பிரிவில் சேஷாத்ரி, மின் திட்டம் சிவில் பிரிவில் ரபேல் ரோஸ் உள்ளிட்ட பல அதிகாரிகள் இந்த வகையில் சிறப்பு அதிகாரிகளாக பணியாற்றுகின்றனர். இதேபோல் மேற்பார்வை பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், நிர்வாக அதிகாரி, நிதிப்பிரிவு அதிகாரி என பல பதவிகளில் 60-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர்.

வாரியத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருக்கும் நிலையில், ஓய்வு பெற்ற வர்களை மீண்டும் பணியில் அமர்த்த பல்வேறு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, மின் துறையில் துறைத் தலைவர்களாக பணியாற்றிய மின் விநியோகப்பிரிவு இயக்குநர் ஜெயசீலன், உற்பத்திப் பிரிவு இயக்குநர்கள் பாலசுப்பிரமணியன், சங்கர் போன்றோர் கடந்த சில மாதங்களில் படிப்படியாக ஓய்வுபெற்றனர். அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கவில்லை.

மின் பகிர்மானத்தில் இயக்கம் பிரிவில் தலைமைப் பொறியாளராக இருந்த கலியபெருமாள், கடந்த 31-ம் தேதி ஓய்வுபெற்றார். மின் பகிர்மானத் தொழில்நுட்பம் மற்றும் மின் இருப்பு நிலவரத்துக்கு ஏற்ப விநியோகத்தை கையாள்வதில் திறமைமிக்க கலியபெருமாளுக்கு சிறப்பு அதிகாரி அல்லது இயக்குநர் பதவி கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால், அவருக்கும் பணி வழங்கவில்லை.

மின் வாரியத்துக்கு இழப்பை ஏற்படுத்தும் காற்றாலை அதிபர்களுக்கு சாதகமான மின் சேமிப்புத் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்ததால், இவர் மீது சில காற்றாலை அதிபர்கள் புகார் அளித்ததாகவும், அதன் பேரில், சிறப்புப் பதவிக்கு நிய மனம் செய்யப்படவில்லை எனவும் மின் துறை வட்டாரத்தில் கூறப்படு கிறது.

இதற்கிடையே, தற்போது சிறப்பு அதிகாரிகளாக உள்ளவர்கள் இம் மாத இறுதிக்குள் பணியிலிருந்து விலக உத்தரவிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 60 அதிகாரி களுக்கு மின் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பணிச்சுமை அதிகமான இடங்களில் உள்ள சிறப்பு அதிகாரிகளை ஒட்டுமொத்த மாக வெளியேற்றுவதால், நிர்வாக மேலாண்மையில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தொழிற்சங்கத் தினர் கருதுகின்றனர். எனவே, சிறப்பு அதிகாரிகளை வெளியேற்றும் நிலையில், அந்த இடங்களுக்கு பதவி உயர்வு அடிப்படையில் உடனடியாக ஆட்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

30,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருக்கும் நிலையில், ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்த தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x