Published : 07 Feb 2014 11:38 AM
Last Updated : 07 Feb 2014 11:38 AM
பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பங்கேற்கும் வண்டலூர் பொதுக் கூட்டத்தில், மதிமுக பொதுச் செய்லர் வைகோ பங்கேற்கப்போவதில்லை என்பது அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் இருந்து உறுதியாகியுள்ளது.
மோடியின் சென்னை வருகை வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ள அவர், பாஜக பொதுக் கூட்டத்தில் தமது கட்சியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பார்கள் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் நடைபெற இருக்கின்ற 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியையும், நேரடியாகவோ - மறைமுகமாகவோ, தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ காங்கிரசுக்கு ஆதரவு தரும் கட்சிகளையும், படுதோல்வி அடையச் செய்வது ஒன்றே, ஊழல் அற்ற நேர்மையான அரசியலை வென்றெடுக்க வழி அமைக்கும்.
தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்கு வஞ்சகமும் கேடும் செய்து, சிங்களக் கடற்படையால் தமிழக மீனவர்கள் நாளும் கொல்லப்படும் அக்கிரமத்தைத் தடுக்காமல், இலங்கை அரசோடு உறவு கொண்டாடும் துரோகம் இழைத்தும், லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை சிங்கள அரசு இனப்படுகொலை செய்ய ஆயுதங்களும் கோடிகோடியாய்ப் பணமும் கொடுத்து உடந்தையாகச் செயல்பட்ட குற்றத்தைப் புரிந்தும், தமிழர்கள் மன்னிக்க முடியாத பாதகம் புரிந்த காங்கிரஸ் கட்சியை மத்திய அரசின் அதிகார பீடத்தில் இருந்து அகற்றுவது ஒன்றே தமிழக வாக்காளர்களின் தலையாய கடமை ஆகும்.
ஜனநாயகத்தின் அடிப்படையையே தகர்க்கின்ற பெருங்கேடுதான் அதிகார பீட ஊழல் ஆகும். இந்திய வரலாற்றில் இதுவரை நடைபெற்று இராத அளவுக்கு, 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரிக் கனிமச் சுரங்க அனுமதி ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ஆதார் வீடு கட்டும் திட்ட ஊழல், அண்மையில் வெளியான ஹெலிகாப்டர் பேர ஊழல் என ஊழல் இமாலய ஊழல் சாம்ராஜ்யமாகி விட்ட, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்துவதோடு, தேர்தலுக்குப் பின்னர் தன்னுடைய ஆதரவிலாவது ஒரு அரசாங்கத்தை அமைத்துவிட காங்கிரஸ் எத்தனிக்கும் என்பதால், அதற்கு எள் அளவு வாய்ப்பும் இல்லாதவாறு காங்கிரசுக்குப் பலத்த தோல்வியைத் தரும் சூழ்நிலை அனைத்து இந்தியாவிலும் ஏற்பட்டு உள்ளது.
பாரதிய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளராக அறிவித்து உள்ள நரேந்திர மோடிக்கு, நாடெங்கும் ஆதரவு அலை எழுந்து உள்ளது.
சமூக நீதி, மதச்சார்பு இன்மை, அரசியலில் நேர்மை, மத்திய அதிகாரக் குவியல் பரவலாக்கப்படும் கூட்டு ஆட்சி, தமிழக வாழ்வாதாரங்களைக் காத்தல், ஈழத்தமிழருக்கு விடியல், இவற்றை லட்சியங்களாகக் கொண்டு இயங்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியோடு உடன்பாடு வைத்துக் கொள்வது என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் தமிழகத்திலும் புதுவையிலும் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு மக்கள் சக்தியைத் திரட்டுவது என்றும், பிப்ரவரி 4 ஆம் நாள், சென்னையில் கூடிய கழகத்தின் 22 ஆவது பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றது.
நாளை, பிப்ரவரி 8 ஆம் நாள் வண்டலூரில், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கு ஏற்கின்ற, பாரதிய ஜனதா கட்சி நடத்துகின்ற திறந்தவெளி மாநாடு நிகர்த்த பொதுக்கூட்டம், மகத்தான வெற்றி பெற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
லட்சக்கணக்கான மக்கள் சங்கமிக்கப் போகும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பாரதிய ஜனதா கட்சியின் தோழர்கள், உடன்பாடுகொள்ளும் கூட்டணிக் கட்சியினர், பொதுமக்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அனைவரும், நிகழ்ச்சிக்கு வரும்போதும் திரும்பிச் செல்லும்போதும், சாலைகளில் கவனமாகவும், பத்திரமாகவும் பயணம் மேற்கொள்ள வேண்டுகிறேன்!" என்று வைகோ கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT