Published : 13 Feb 2015 10:55 AM
Last Updated : 13 Feb 2015 10:55 AM

தமிழக மீனவர்களின் 81 மீன்பிடி படகுகளை மீட்டு கொண்டுவர அரசு சிறப்பு ஏற்பாடு: 150 பேர் கொண்ட மீட்புக் குழு இலங்கை செல்கிறது

இலங்கை நீதிமன்றங்களால் விடு விக்கப்படும் தமிழக மீனவர்களின் 81 படகுகளை கொண்டுவர அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள் ளது. இதற்காக 150 மீனவர் களைக் கொண்ட மீட்புக் குழுக்கள் இலங்கைக்கு அனுப்பப் படுகின்றன.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இலங்கை அரசால் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த டிசம்பர் 5-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்திய - இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்களிடையே நடந்த கூட்டத்தில் மீனவர் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், மீனவர்களின் படகுகளை விடுவிக்க படகு உரிமையாளர்கள் இலங்கை அதிகாரிகளிடம் விண்ணப்பிக்குமாறு ஆலோசனை தெரிவித்ததாகவும், இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளு மாறும் இந்திய வெளியுறவுத்துறை இணைச் செயலாளர் தெரிவித் திருந்தார்.

இதுபற்றி, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிக்கு தமிழக மீன்வளத்துறை செயலர் கடிதம் எழுதினார். சம்பந்தப்பட்ட மீன்பிடி படகுகளின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் கேட்புமனுக்களை தாக்கல் செய்ய வலியுறுத்தாமல் படகுகளை விடுவிக்க இலங்கை அதிகாரிகளை இந்திய தூதரகம் மூலம் மீண்டும் வலியுறுத்த வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அவ்வாறு இயலாத பட்சத்தில், படகுகளை முன்கூட்டியே விடுவிப்பதற்கு ஏதுவாக அதன் உரிமையாளர்கள் சார்பில் வழக்கு களை முன்னெடுத்துச் செல்ல உரிய வழக்கறிஞரை நியமிக்க கேட்டுக் கொண்டதோடு, வழக்குக் கான செலவுகளை தமிழக அரசே ஏற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராக டி.விநோதன், ஊர்க் காவல் துறை மற்றும் பருத்தித் துறை நீதிமன்றங்களில் ஆஜராக ஜோய் மகாதேவன் ஆகியோர் வழக் கறிஞர்களாக இந்திய தூதரகத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர். படகு களை விடுவிப்பதற்கான கேட்பு மனுக்கள் பல்வேறு நீதிமன்றங் களில் வியாழக்கிழமை (நேற்று) முதல் தாக்கல் செய்யப்படவுள்ள தாக தூதரக அதிகாரி தெரிவித் துள்ளார்.

எனவே, ராமேஸ்வரம் மீன் துறை உதவி இயக்குநர் மற்றும் மீன்துறை ஆய்வாளர் ஆகியோர் படகு உரிமையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட அதிகார ஆவணங்களுடன் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இலங்கை நீதிமன்றங்களால் விடுவிக்கப்படும் மீனவர்களின் 81 மீன்பிடி படகு களும் தமிழக மீன்வளத் துறை அதிகாரிகளால் பொறுப் பேற்கப்படும். இதைத்தொடர்ந்து, மீன்பிடி படகுகளை தமிழகத்துக்கு கொண்டுவர ஏதுவாக சுமார் 150 மீனவர்களைக் கொண்ட மீட்புக் குழுக்கள் மீட்பு படகுகளுடன் இந்திய அரசின் அனுமதி பெற்று இலங்கைக்கு அனுப்பப்படும்.

இந்த மீட்புக் குழுக்கள், 81 படகுகளில் ஏற்பட்டிருக்கும் பழுதுகளை நீக்கி, இந்திய கடலோர காவல்படை உதவியுடன் தமிழகம் கொண்டு வந்து சேர்ப்பார்கள். மீட்புக் குழு மற்றும் மீட்புப் படகுகள் இலங்கைக்கு சென்று அங்குள்ள 81 மீன்பிடி படகுகளை தமிழகம் கொண்டு வருவதற்கான எரிபொருள், உணவு மற்றும் பழுது நீக்கச் செலவு ஆகிய அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x