Published : 21 Feb 2015 12:19 PM
Last Updated : 21 Feb 2015 12:19 PM

நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிரான அலை உருவாகியுள்ளது: சீத்தாராம் யெச்சூரி கணிப்பு

அரசுக்கு எதிரான அலை நாட்டில் உருவாகியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு சென்னையில் நான்கு நாட்கள் நடைபெற்றன. மாநாட்டின் நிறைவாக நேற்று முன்தினம் ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:

மக்களவைத் தேர்தலுக்கு பின் காங்கிரஸின் நிலைமையை கிண்டல் செய்த மோடி, ஒரு பேருந்தில் செல்லும் அளவு குறைவான எம்பிக்களே அக்கட்சிக்கு உள்ளனர் என்று வர்ணித்தார். தற்போது டெல்லி மாநில தேர்தலில் பாஜகவின் எண்ணிக்கை ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவில் செல்லும் அளவு குறைந்துவிட்டது. இந்திய மக்களிடம் அரசுக்கு எதிரான அலை உருவாகி வருகிறது. இதன் முதல் பிரதிபலிப்புதான் டெல்லி தேர்தல் முடிவு.

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்திருந்தபோது பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த உடையை ஏலம் விடப்போவதாக கூறப்படுகிறது. இத்தகைய ஏலமே இந்திய சட்டத்துக்கு எதிரானதாகும். அமைச்சர்கள் தங்களுக்கு கிடைக்கும் பரிசுப் பொருட்கள் அனைத்தையும் அரசாங்க கஜானாவில் ஒப்படைக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சாரதா ஊழல் போல் இதுவும் சிபிஐ விசாரணைக்கு உட்படலாம்.

தற்போது தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கை ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்குமான இடைவெளியை மேலும் அதிகப்படுத்தும். பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவில் தொழில் தொடங்க மோடி அழைக்கிறார். ஆனால், தமிழகத்தின் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் 25 ஆயிரம் இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர்.

நரசிம்மராவின் தாராளமய கொள்கைகள், இந்திரா காந்தியின் எதேச்சதிகார போக்கு, வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இருந்த மதவெறி கொள்கைகள் ஆகிய மூன்றையும் கொண்டதாக மோடியின் அரசு உள்ளது. உயர்சாதி ஆதிக்கத்தையும் வட இந்திய ஆதிக்கத்தையும் எதிர்த்து திராவிட கட்சிகள் தொடங்கப்பட்டன. ஆனால், இன்று அதிமுகவுக்கு நாடாளு மன்றத்தில் போதிய இடங்கள் இருந்த போதும், தமிழக மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்காமல், பாஜக அரசுடன் கொஞ்சி குலாவுகிறது. இந்தியாவை பாதுகாத்து, புதிய சமூகம் படைத்திட இடதுசாரிகளுடன் மக்கள் ஒன்றிணைந்து போராட அழைக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x