Last Updated : 19 Feb, 2015 03:49 PM

 

Published : 19 Feb 2015 03:49 PM
Last Updated : 19 Feb 2015 03:49 PM

தூத்துக்குடி: விவசாயிகளுக்கு லாபம் தரும் கறிவேப்பிலை சாகுபடி

தூத்துக்குடி மாவட்டத்தில் லாபம் தரும் தொழிலாக கறிவேப்பிலை சாகுபடி மாறியுள்ளது.

இந்திய உணவில் கறிவேப்பிலைக்கு முக்கிய இடமுண்டு. மணத்துக்காக பயன்படுத்தப்படும் கறிவேப்பிலையில் ஏராளமான சத்துப் பொருட்கள், மருத்துவ குணங்கள் உள்ளன.

அனைத்து வகை சமையலிலும் தவறாது இடம் பெற்றிருக்கும் கறிவேப்பிலையில் 0.66 சதவீத நீர்ச்சத்து, 6.1 சதவீத புரதம், 0.1 சதவீத கொழுப்பு, 0.16 சதவீத மாவுப்பொருள், 6.4 சதவீத நார்ப்பொட்கள் மற்றும் உடலுக்கு மிகவும் தேவைப்படும் தாது உப்புக்கள் 4.2 சதவீதம் உள்ளன.

இதுதவிர குறைந்த அளவில் காணப்படும் சத்துக்களாக 100 கிராம் இலையில் 810 மிலி கிராம் கால்சியம், 600 மிலி கிராம் பாஸ்பரஸ், 3.1 மிலி கிராம் இரும்புச் சத்து, 4.0 மிலி கிராம் வைட்டமின்-சி, 2.3 மிலி கிராம் நிகோடினிக் அமிலம், வைட்டமின்-ஏ ஆகியவையும் உள்ளன.

பசியைத் தூண்டி, உண்ணும் ஆவலை வளர்க்கும். செரிப்பதற்கு துணையாக இருக்கும். உடலுக்கு உரமூட்டவல்லது. வெள்ளை அணுக்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலை கறிவேப்பிலையின் சாறு அதிகரிக்கச் செய்கிறது. இலையுடன் பிற மருந்துகளைச் சேர்த்து துவையல் செய்து சாப்பிட பித்த வாந்தி, செரியாமை, வயிற்றுளைச்சல் குணமாகும்.

சாகுபடி முறைகள்

கறிவேப்பிலைக்கு நகர்புறங்களில் அதிக வரவேற்பு இருப்பதை தொடர்ந்து தனிப்பயிராக கறிவேப்பிலையை விவசாயிகள் பயிரிடத் தொடங்கியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக விவசாயிகள் கறிவேப்பிலை பயிரிட்டுள்ளனர். தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஆர்.ஆவுடையப்பன் கூறும்போது, `மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 320 ஹெக்டேர் பரப்பளவில் கறிவேப்பிலை பயிரிடப் பட்டுள்ளது. கறிவேப்பிலை பயிரை நீர்ப்பாசன வசதியுள்ள நிலத்தில் 2.5 X 2.5 மீட்டர் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். வடகிழக்கு பருவமழைக்கு முந்தையை ஜூன்- ஜூலை மாதம்தான் கன்று நடவுக்கு ஏற்ற காலம். பருவமழை காலத்தில் பயிர் நன்கு செழித்து வளரும். சொட்டுநீர் பாசன முறை நல்ல பயனைத் தரும். சொட்டுநீர் பாசனம் மூலமே நீரில் கரையும் உரங்களை பயிருக்கு வழங்கலாம்.

90 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். ஒவ்வொரு அறுவடையின் போதும் ஏக்கருக்கு 3,600 கிலோ கறிவேப்பிலை கிடைக்கும். ஒரு ஆண்டில் ஒரு ஏக்கரில் 14,400 கிலோ இலை கிடைக்கும்.

ஒரு ஏக்கர் சாகுபடிக்கு உரம், களை எடுத்தல், அறுவடை உள்ளிட்டவைக்கு ரூ. 85 ஆயிரம் வரை செலவாகும். சென்னை கோயம்பேடு, ஓட்டன்சத்திரம், மதுரை உள்ளிட்ட மார்க்கெட் டுகளில் கறிவேப்பிலைக்கு அதிக தேவை இருப்பதால் இந்த ஆண்டு கறிவேப்பிலைக்கு நல்ல விலை கிடைக்கிறது’ என்றார் அவர்.

ரூ. 2 லட்சம் லாபம்:

ஓட்டப்பிடாரம் வட்டம் தென்ன மப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஏ.சீனிச்சாமி கூறும்போது, ` 4 ஏக்கரில் கறிவேப்பிலை சாகுபடி செய்துள்ளேன். வடகிழக்கு பருவ மழை நன்றாக பெய்ததால் செடிகள் செழித்து வளர்ந்துள்ளன. இந்த ஆண்டு கறிவேப்பிலை கிலோ ரூ. 20-க்கு விற்பனையாகிறது. ஓராண்டில் எனக்கு ரூ. 2.03 லட்சம் லாபம் கிடைத்துள்ளது’ என்றார் அவர்.

ஓட்டப்பிடாரம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சி.பழனிவேலாயுதம் கூறும்போது, `இந்த விவசாயிக்கு 2008-ல் தோட்டக்கலைத்துறை மூலம் சொட்டுநீர் பாசன வசதி செய்து கொடுக்கப்பட்டது. இதனை பின்பற்றி மற்ற விவசாயிகளும் கறிவேப்பிலை சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டலாம். விவசாயிகளுக்கு தேவையான சொட்டுநீர் பாசன வசதி, தொழில்நுட்ப ஆலோசனை உள்ளிட்டவற்றை வழங்க தோட்டக் கலைத்துறை தயாராக உள்ளது’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x