Published : 24 Feb 2015 09:03 AM
Last Updated : 24 Feb 2015 09:03 AM

நியூட்ரினோ திட்டம் தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தடை விதிக்கக் கோரி மதிமுக பொதுச் செயலர் வைகோ உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு சென்றமுறை விசாரணைக்கு வந்த போது, நியூட்ரினோ திட்டத்தால் மனித குலத்துக்கு நன்மை ஏற்படும் என மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப் பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.தமிழ் வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதில் வைகோ வாதிடும்போது, நியூட்ரினோ திட்டத்தால் தேனி மாவட்டம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் பேரழிவு ஏற்படும். நியூட்ரினோ திட்டத்துக்கு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இதுவரை அனுமதி பெறவில்லை. ஆனால், அதற்குள் பொட்டிபுரத்தில் வேலி, பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளன. பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. திட்டம் குறித்து அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்கவில்லை.

திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கு நிபுணர் குழுவை நீதிமன்றம் அமைக்க வேண்டும். நியூட்ரினோ ஆய்வகப் பணிக ளுக்கு தடை விதிக்க வேண்டும். இல்லையெனில் பொட்டிபுரத்தில் தற்போது என்ன நிலை உள்ளதோ, அந்த நிலை தொடர உத்தரவிட வேண்டும் என்றார்.

மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன் வாதிடும்போது, இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. திட்டம் குறித்து தெளிவாக தெரியாமல் முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத் துக்கு மத்திய அரசு 2011-ல் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது. திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தேவையான அளவு புறம்போக்கு நிலம் தந்துள்ளது. எந்த கட்டுமானப்பணிகளும் நடை பெறாத நிலையில் தடை விதிக்க வேண்டியதில்லை என்றார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிடும்போது, திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப் பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊராட்சி கூட்டங்களில் விவாதிக்கப் பட்டுள்ளது. தமிழக மாசு கட்டுப் பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி கேட்டு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு இதுவரை விண் ணப்பம் வரவில்லை என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் அளித்த உத்தரவு: இது முக்கிய மான பிரச்சினை. நியூட்ரினோ திட்டத்தால் மக்கள் பாதிக்கப்படுவர் என அச்சம் தெரிவித்துள்ளனர். இது போன்ற விஷயங்களில் தமிழக அரசு மவுனமாக இருக்கக் கூடாது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்த பதில் திருப்தி கரமாக இல்லை. இந்த பதில், சமைப்பதற்கு தேவையான பொருள்கள் இருக்கின்றன. ஆனால், சாப்பாடு இல்லை என்பது போல் இருக்கிறது.

நியூட்ரினோ திட்டம் வேண்டுமா? வேண்டாமா? இத்திட்டத்தால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன என்பது குறித்து தமிழக அரசு தெளிவாக பதில ளிக்க வேண்டும். எனவே, நியூட் ரினோ திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து, விசாரணையை மார்ச் 5-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x