Published : 16 Feb 2015 11:44 AM
Last Updated : 16 Feb 2015 11:44 AM

தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வு: மாநகராட்சிப் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

தொற்று நோய் விழிப்புணர்வு குறித்து சென்னை மாநகராட்சிப் பள்ளிகளுக்கு சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. ஜனவரி மாதம் முதல் இது வரை தமிழ்நாட்டில் எட்டு பேர் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு பலியாகி உள்ளனர். எனவே, இதுபற்றி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில், தொற்று நோய் வராமல் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கைகளையும் முகத்தையும் அடிக்கடி கழுவ வேண்டும். இருமல் வரும் போது கையை வைத்து வாயை மூடிக் கொண்டு இரும வேண்டும். காய்ச்சல் இருந்தால் இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் இருக்க வேண்டும். காய்ச்சல் மற்றும் இருமல் தொடர்ந்தால் அருகில் உள்ள மாநகராட்சி மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து மாநகரட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பன்றிக் காய்ச்சல் என்று நேரடியாக கூறினால், பொது மக்கள் பயப்படுவார்கள் என்பதால் தொற்று நோய் விழிப்புணர்வு நடவடிக்கைக்கான சுற்றறிக்கையாக இதை வெளியிட்டிருக் கிறோம். சில தனியார் பள்ளிகளில் முக கவசம் அணிய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் மாநகராட்சி அப்படி வலியுறுத்தவில்லை. அது தேவை யில்லாத பீதியை உண்டாக்கும். காய்ச்சல் மற்றும் இருமல் வந்தால் அதை அலட்சியமாக நினைக்காமல் மருத்துவரை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். மேலும் இந்த விழிப்புணர்வு தகவல்களை ஒவ்வொரு நாளும் வழிபாட்டு நேரத்தில் நினைவுகூரவும் அறிவுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கல்பனா இதுபற்றி கூறும்போது, “எங்கள் பள்ளியில் ஏதாவது ஒரு மாணவருக்கு இரண்டு நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் அல்லது இருமல் இருந்தால் அவரது பெற்றோரை அழைத்து தகவல் சொல்கிறோம்.

நாற்பது மாணவர்களுக்கு மேல் ஒரே இடத்தில் கூடாமல் பார்த்து கொள்கிறோம். எனவே காலை வழிபாடு வகுப்பறைகளிலேயே நடை பெறுகிறது. பள்ளியின் ஆண்டு விழா ஒத்தி வைக்கப் பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x