Last Updated : 01 Feb, 2014 09:51 AM

 

Published : 01 Feb 2014 09:51 AM
Last Updated : 01 Feb 2014 09:51 AM

பண்ருட்டியார் மகனுக்கு தேர்தலில் சீட்?- ஆலந்தூரா... கடலூரா? ஆதரவாளர்கள் கருத்து

அண்மையில் அண்ணா விருது பெற்ற பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுக-வுக்கு பிரச்சாரம் செய்யத் தயார் என அறிவித்திருக்கிறார். இன்னொரு பக்கம் தனது மகன் சம்பத்தை அரசியலில் களமிறக்கவும் திட்டமிடுவதாகச் சொல்கிறார்கள்.

இதுகுறித்து ’தி இந்து’விடம் பேசிய பண்ருட்டியாரின் நெடு நாளைய விசுவாசிகள், “பண்ருட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பண்ருட்டியாருக்கு இன்னும் செல்வாக்கு உள்ளது. பண்ருட்டியாருடன் தேமுதிக-வில் சேர்ந்த அவரது விசுவாசிகள் இப்போது அங்கிருந்து விலகி விட்டனர். இவர்களுடைய ஆர்வம் எல்லாம் பண்ருட்டியார் தனது அரசியல் வாரிசாக மகன் சம்பத்தை பிரகடனம் செய்வதோடு கடலூர் நாடாளுமன்றத் தொகுதியிலும் அவரைப் போட்டியிடச் செய்வது தான்.

ஆலந்தூரில் போட்டி?

ஆதரவாளர்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்டு பண் ருட்டியாரும் இது குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். தனது ராஜினாமாவால் காலியாக உள்ள ஆலந்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மகனை நிறுத்த பண்ருட்டியார் பிரயாசைப் படுவதுபோல் தெரிகிறது. இதுவரை வெளிநாட்டில் இருந்த சம்பத், தற்போது சென்னையில் நிரந்தரமாக தங்கியுள்ளார்’’ என்கிறார்கள்.

இன்னொரு தரப்போ, “அரசியல் சாணக்கியரான பண் ருட்டியாருக்கு அதிமுகவில் முக்கியப் பதவி தரப்படலாம் அல்லது நாடாளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் அவரையே வேட்பாளராக நிறுத்தலாம்’’ என்கிறது. இந்தக் கருத்துகள் குறித்து பண்ருட்டியாரின் நெருங்கிய நண்பரான மிராசுதாரர் தனபதியிடம் கேட்டதற்கு, “ எம்ஜிஆர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி இவர்களுக்கு மத்தியில் இணைப்புப் பாலமாக இருந்தவர். டில்லியில் அத்தகைய அரசியல் லாபியை மீண்டும் செய்யுமளவுக்கு இப்போது அவரது உடல்நிலை இடம் தருமா எனத் தெரியவில்லை’’ என்றார்.

மற்றொரு நண்பரான கீழ்மாம் பட்டு வி.ஜெயராமன் கூறும்போது, ’’தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு பண்ருட்டியாரின் உடல்நிலை இல்லை. மகனை அரசியலுக்கு கொண்டுவருவது குறித்து அவர் எங்களிடம் பேசவில்லை. அப்படி வரும்பட்சத்தில் கடலூர் தொகுதியில் களமிறக்கினால் கட்டாயம் வெற்றி பெறுவார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x