Published : 21 Feb 2015 09:37 AM
Last Updated : 21 Feb 2015 09:37 AM

வள்ளியூரில் கல்லூரி மாணவர் கொலை: பஸ்கள் மீது கல்வீச்சு, போலீஸ் தடியடி

வள்ளியூரில் பொறியியல் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். கல்வீச்சில் 10 அரசு பஸ்கள், 2 வேன், ஒரு கார் சேதமடைந்தன. கடைகளை அடைக்க சொல்லி ரகளையில் ஈடுபட்டவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே நம்பியான்விளை கிராமத்தை சேர்ந்த சுடலைமுத்து மகன் டேவிட் ராஜா (21). இவர் வள்ளியூர் அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்தார். வள்ளியூர் - ராதாபுரம் சாலையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் அவரை வழிமறித்து வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர். போலீஸார் விசாரணையில் காதல் விவகாரத்தில் டேவிட்ராஜா கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே நம்பியான்விளை, ராஜபுதூர், கேசவநேரி, வடலிவிளை, கலந்தபனை, ரோஸ்மியாபுரம், பணகுடி பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வள்ளியூரில் திரண்டனர். கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் வள்ளியூர் பேரூராட்சி தலைவர் லாரன்ஸ் தலைமையில் திருநெல்வேலி- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது 9 அரசு பஸ்கள், 2 வேன், ஒரு கார் ஆகியவை கல்வீசி தாக்கப்பட்டன. கேசவநேரி அருகே மற்றொரு பஸ் மீது கல் வீசப்பட்டது. திருநெல்வேலி சரக டிஐஜி சுமித்சரண், மாவட்ட எஸ்.பி நரேந்திரன் நாயர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு மணிநேரத்துக்குப் பின் அவர்கள் கலைந்து ஊர்வலமாக வள்ளியூரை நோக்கிச் சென்றனர். அப்போது அங்குள்ள தனியார் மருத்துவமனை, கடைகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. சிலர் கடைகளை அடைக்குமாறு ரகளை செய்ததால் போலீஸார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

எஸ்.பி நரேந்திரன்நாயர் கூறும்போது. ‘கடைகளை அடைக்கச் சொல்லி ரகளையில் ஈடுபட்டதாக வள்ளியூர் பேரூராட்சி தலைவர் லாரன்ஸ் உள்ளிட்ட 16 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. டேவிட்ராஜா கொலை தொடர்பாக நாங்குநரி சுங்கச்சாவடி அருகே சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x