Published : 20 Feb 2015 12:03 PM
Last Updated : 20 Feb 2015 12:03 PM

சட்டப்பேரவை தலைவர் சர்வாதிகாரிபோல செயல்படுகிறார்: சஸ்பெண்ட் ஆன தேமுதிக எம்எல்ஏக்கள் புகார்

சட்டப்பேரவையில் பேரவை தலைவர் சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் என சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேமுதிக எதிர்க்கட்சி துணைத் தலைவர் மோகன் ராஜ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று நடந்த விவாதத்தின்போது, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பற்றி பேசிய தேமுதிக எம்எல்ஏ மோகன் ராஜ் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு வார்த்தையைக் கூறினார். அதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்த வார்த்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடும் அமளியும் கூச்சலும் குழப்பமும் நிலவியது. தேமுதிக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

பின்னர், தேமுதிக எதிர்க்கட்சி துணைத் தலைவர் மோகன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:

அதிமுக உறுப்பினர்கள் சட்ட மன்றத்தில் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசாமல், ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற முன்னாள் முதல்வரின் புகழ்பாடும் மன்றமாக மாற்றிவிட்டனர். மேலும் இவர்கள், அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் குறை சொல்லும் வகையிலேயே பேசுகின்றனர். அந்த வார்த்தை களை பேரவை தலைவர் நீக்க மாட்டேன் என்கிறார்.

விமர்சிக்கவில்லை

முன்னாள் முதல்வரை நான் விமர்சிக்கவில்லை. பேரவை தலைவரும், சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீனும் கையெழுத்திட்டு, ‘ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதால் ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளது' என்று அறிக்கை மூலம் தெரிவித்தார்கள். அதைத்தான் நான் சொன்னேன்.

கீழே தள்ளினர்

ஆனால், ஆளும்கட்சியினர் அடிக்க பாய்கின்றனர். இது சண்டை போடும் மன்றமா? மக்கள் பிரச்னையை தீர்க்கும் சட்டமன்றமா? என தெரியவில்லை. நான் பேச கூடாது என்று சர்வாதிகார போக்கில் பேரவை தலைவர் பேசுகிறார். அதை, எங்களது கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேட்டபோது சட்டையைப் பிடித்து கீழே தள்ளுகின்றனர்.

எங்களை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். ஆளுநர் உரையில் உள்ள குறைகளைத்தான் சுட்டிக்காட்டி அதை நிவர்த்தி செய்ய சொன்னோம். இவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு 3,100 மெகாவாட் மின் உற்பத்தி செய்ததாக கூறுகின்றனர்.

இதுபற்றி தகவல் அறியும் சட்டத்தில் கேட்டபோது, புதியதாக ஒரு மெகாவாட் கூட மின் உற்பத்தி செய்யவில்லை என தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய தமிழகம் வெளிநடப்பு

பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எழுந்து ஒரு பிரச்சினை குறித்து பேச வாய்ப்பு கேட்டபோது, வாய்ப்பு மறுக்கப்பட்டதால், வெளிநடப்பு செய்தார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகவும், காவல்துறை பாகுபாடின்றி இருப்பதாகவும் ஆளுநர் உரையில் தெரிவித்துள்ளார். ஆனால், நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே இனாம் வெள்ளைகால் கிராமத்தில் தலித் சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்து 3 வாரங்கள் ஆகவுள்ள நிலையில், இதுவரையில் யாரும் கைது செய்யப் படவில்லை. இது தொடர்பாக பேச முற்பட்டேன். ஆனால், கடந்த 2 நாட்களாக பேரவை தலைவர் அனுமதி வழங்கவில்லை. இதை கண்டித்து நான் வெளிநடப்பு செய்தேன்.

இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x