Published : 15 Feb 2015 10:53 AM
Last Updated : 15 Feb 2015 10:53 AM
சென்னையில் பழைய பல்லா வரம் பகுதியில் வசித்து வரும் மக்கள் தொல்லியல் துறையின் கெடுபிடியால் புதிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடி யாமல் உள்ளனர். இதைக் கண்டித்து, சுமார் 3 ஆயிரம் குடும்பத்தினர் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி இன்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வுள்ளனர்.
3 ஆயிரம் குடும்பம் பாதிப்பு
சென்னை புறநகர்ப் பகுதியான பழைய (ஜமீன்) பல்லாவரத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டில் இந்திய தொல்லி யல் துறை பிறப்பித்த ஆணை யொன்று அவர்கள் தலையில் இடியாக இறங்கியது. ‘பழைய பல்லாவரம் பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கற்கால மனிதர்கள் வாழ்ந்தார் கள். அங்கு ஆய்வு நடத்த வேண்டும். அதனால் அங்கு புதிய கட்டுமானம் நடக்கக் கூடாது, வீடுகளில் பராமரிப்புப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது’ என்று உத்தரவிட்டது. இதனால் வாழ்நாள் வருமானத் தையெல்லாம் போட்டு நிலம் வாங்கி வீடு கட்டிய, கட்ட இருந்த பல ஆயிரம் குடும்பத்தினர் செய்வதறியாமல் உள்ளனர்.
இது குறித்து பழைய பல்லாவரம் தொல்லியல் தடை யாணை எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சமூக சேவகர் சந்தானம் ஆகியோர் கூறியதாவது:
சர்வே எண் 56 (32 ஏக்கர்) மற்றும் சர்வே எண் 63 (27 ஏக்கர்) ஆகிய இடங்களுக்கு உட்பட்ட 6 வார்டுகளைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இநத விவகாரத்தில் பாதிக்கப்பட்டனர்.
அது கற்கால மனிதர்கள் வாழ்ந்த, புதைக்கப்பட்ட இடம் என்று தொல்லியல் துறையினர் கூறி, 100 மீட்டர் தூரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய கட்டிடங்களைக் கட்டக்கூடாது, பராமரிப்பு மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டனர். 100 மீட்டருக்கு அப்பால் 200 மீட்டருக்கு உட்பட்ட இடங்களில் கட்டுமானம் மேற்கொள்ள தொல்லியல்துறையின் தடையில்லா சான்றிதழைப் பெறவேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதைக் கண்டித்து 6 ஆயிரம் குடியிருப்புவாசிகளைத் திரட்டி உண்ணாவிரதம், போராட்டம் என பலவிதங்களில் எதிர்ப்பைப் பதிவுசெய்தோம்.
தொல்லியல் துறை பரிந்துரை
இதற்கிடையே, தொல்லியல் துறையின் சென்னை வட்ட கண்காணிப்பாளர் மகேஸ்வரி, தமிழகத்தில் 63 இடங்களில் ஆய்வு நடத்த முடியாத நிலை உள்ளதைக் குறிப்பிட்டு, அங்கு கட்டுமானம் மேற்கொள்ள விலக்கு அளிக்கலாம் என மத்திய தொல்லியல் துறைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் கடிதம் எழுதினார்.
பின்னர், இந்திய தொல்லியல் துறை இயக்குநர் நம்பிராஜனை அணுகி கேட்டபோது, “பழைய பல்லாவரம் பகுதியைக் குறிப்பிட்டு சென்னை அலுவலகம் கடிதம் எழுதவில்லை” என்று தெரிவித்தார். ஆனால், அந்த பரிந்துரையை அளித்த மகேஸ்வரி மாற்றலாகி, தற்போது வேறு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர், கோப்புகளைப் பார்த்து, பரிசீலித்து முடிவு சொல்வதாகக் கூறியுள்ளார்.
இதற்கிடையே, தகவல் பெறும் சட்டத்தின் கீழ் மனு செய்ததில், “பழைய பல்லாவரத்தில் ஆய்வு நடத்த நிதி வசதி இல்லை. எப்போது மேற்கொள்ளப்படும் என்பதும் உறுதியில்லை” என்று பதில் கிடைத்தது. பிரச்சினை நீண்டு கொண்டே போகிறது.
அதனால் மீண்டும் போராட முடிவு செய்துவிட்டோம். பாதிக்கப்பட்ட 3 ஆயிரம் வீடுகளில் இன்று (15-ம் தேதி) கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தி எதிர்ப்பைத் தெரிவிக்கவுள்ளோம்.
கற்கால மனிதர்கள் புதைக்கப் பட்டதாகக் கூறப்படும் இடங்களில் வீடுகள் கட்டப்பட்டுவிட்டன. கல் குவாரிகள் பல இடங்களில் அதை மறைத்துவிட்டன. இனி ஆய்வு நடத்தவே வாய்ப்பில்லை. இதை புரிந்து கொண்டு மத்திய அரசு உதவவேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT