Published : 28 Feb 2015 09:50 AM
Last Updated : 28 Feb 2015 09:50 AM

எம்.என்.சுப்ரமணியம் விருதுக்கு அலர்மேல் வள்ளி தேர்வு

பாரம்பரிய நடனத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப் படும் ‘எம்.என்.சுப்ரமணியம் விருது' பிரபல நடனக் கலைஞர் அலர்மேல் வள்ளிக்கு இந்த ஆண்டு வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக சென்னை மியூசிக் அகாடமி தலைவர் என்.முரளி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பாரம்பரிய நடனத்தில் சிறந்த திறமையும், நுட்பமும் கொண்டவர்கள், நடனக்கலையை பரப்புபவர்கள் ஆகியோருக்கு மறைந்த எம்.என்.சுப்ரமணியம் நினைவை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்பட்டு வருகிறது. ரொக்கம், பாராட்டுப் பத்திரம் ஆகியவை இந்த விருதில் அடங்கும்.

இந்த ஆண்டு இவ்விருதுக்கு பிரபல பரதநாட்டியக் கலைஞர் அலர்மேல் வள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பந்த நல்லூர் சொக்கலிங்கம் பிள்ளை, அவரது மகன் சுப்பராய பிள்ளை ஆகியோரிடம் பரதம் பயின்றுள் ளார். ஏற்கெனவே இசை பயின்ற அவர், பிரபல பாடகி முக்தாவிடம் பதம், ஜாவளி ஆகியவற்றைக் கற்றவர். கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளில் இந்திய பாரம்பரிய நடனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

விருது வழங்கும் விழா சென்னை மியூசிக் அகாடமியில் மார்ச் 6-ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும். புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமண்யம் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். அதன் பிறகு அலர்மேல் வள்ளியின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x