Published : 25 Feb 2015 04:42 PM
Last Updated : 25 Feb 2015 04:42 PM

விருதுநகர்: 24 ஆண்டுக்கு முன்பு வீட்டைவிட்டு சென்றவர் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தார்

படிப்பு வராததால் 24 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டைவிட்டுச் சென்றவர் மீண்டும் குடும்பத்தினருடன் இணைந்தார்.

விருதுநகர் அருகேயுள்ள அழகாபுரியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. விவசாயி. இவரது மூத்த மகன் தனபால்(44). இவர் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது தேர்வில் தோல்வி அடைந்தார். தொடர்ந்து 5 ஆண்டுகள் பள்ளிக்குச் சென்றும் தேர்ச்சிபெறவில்லை. ஆனால், தந்தை படிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதனால், தனபால் 1991-ம் ஆண்டு தனது 20-வது வயதில் வீட்டைவிட்டுச் சென்றார். குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

அழகர்சாமி இறந்த பின்னர், அண்ணன் தனபாலை கண்டுபிடித்து தருமாறு அவரது இளைய தம்பி சுரேந்திரன்(29) சூலக்கரை காவல் நிலையத்தில் 2013-ல் புகார் கொடுத்தார்.

இந்நிலையில், காணாமல் போனவர்கள், கேட்பாரற்ற சடலங்கள் தொடர்பான விசாரணை அதிகாரி செங்கல்பட்டு ரயில்வே காவலர் பார்த்திபன், ஒரு வழக்கு விசாரணைக்காக கடந்த 2 நாள்களுக்கு முன் மேல்மருவத்தூர் சென்றார். அப்போது ரயில் நிலையத்தில் நின்றிருந்த தனபாலை பார்த்து சந்தேகம் அடைந்தார்.

அவரிடம் விசாரணை நடத்திய போது, அவர் வீட்டைவிட்டு வெளியே வந்தது தெரியவந்தது. காணாமல் போனவர்களின் விவரங்களை ஒப்பிடுகையில், தனபால் விருது நகரைச் சேர்ந்தவர் என்பதும், அவரைக் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதும் தெரியவந்தது.

மேலும், வீட்டைவிட்டுச் சென்ற தனபால், சென்னை, திருச்சி உட்பட பல்வேறு இடங்களில் ஹோட்டல்கள், திருமண மண்டபங்களில் பணியாற்றி யுள்ளார். இதுவரை இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற விவரங்கள் தெரியவந்தன.

இது குறித்து சூலக்கரை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சூலக்கரை காவல் நிலையத்தில் தனபாலை காவலர் பார்த்திபன் நேற்று காலை ஒப்படைத்தார்.

சிறு வயதில் காணாமல்போன சகோதரர் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில் அவரது தம்பிகளான முருகன், சுரேந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x