Published : 16 Feb 2015 11:54 AM
Last Updated : 16 Feb 2015 11:54 AM

அடிப்படை வசதி இல்லாத மயான நிலம்

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோத்துப்பெரும்பேடு கிராமத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் மயானப் பயன்பாட்டுக்காக நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதுதொடர்பாக அரசு ஆவணங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய மாற்றம் செய்ய வில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அந்த மயானத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை. இதனால் இங்கு இறுதிச் சடங்கு செய்ய வரும் மக்கள் கடும் சிரமத்தைச் சந்திக்கின்றனர். இதுகுறித்து, சோத்துப்பெரும்பேடு கிராம மக்கள் கூறியதாவது:

சோத்துப்பெரும்பேடு கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். பல ஆண்டுகளாகக் கிராமத்தை ஒட்டியுள்ள கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தையே மயானமாகப் பயன்படுத்தி வந்தோம். இந்நிலையில் 7 ஆண்டுக்கு முன் கொசஸ்தலை ஆற்றின் கரையைப் பொதுப்பணித்துறை விரிவாக்கம் செய்தது. இதனால், கொசஸ்தலை இறுதிச் சடங்குகளைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது இதனையடுத்து, சோத்துப்பெரும் பேடுவில், களத்துப் புறம்போக்கு நிலத்தினை மயானமாகப் பயன்படுத்திக் கொள்ள அதிகாரிகள் அனுமதித்தனர்.

ஆனால், அந்நிலத்துக்குப் பட்டா நிலங்கள் வழியாகத் தான் செல்ல வேண்டும். இதற்கு அந்நிலங்களின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்துப் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 5 ஆண்டுக்கு முன்னர் சோத்துப் பெரும்பேடு கிராமத்திலுள்ள அரசுக்குச் சொந்தமான 0.81 சென்ட் புன்செய் தரிசு நிலத்தை மயானத்துக்காக வருவாய்த் துறை அதிகாரிகள் தேர்வு செய்தனர். அப்போது முதல் அந்தப்பகுதியை இறுதிச் சடங்குகளைச் செய்யும் இடமாகப் பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால், சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பாக அரசு ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்து இப்பகுதியை மயானத்துக்கான இடம் என இதுவரை வருவாய்த் துறை அதிகாரிகள் பதியவில்லை. இதனால் மயானத்தில் சுற்றுச் சுவர், எரிமேடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்ய முடியவில்லை என ஊரக வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

மயானப் பகுதி மேம்பாட்டுக்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 2014-15-ம் ஆண்டுக்கான தாய் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட ரூ.3.8 லட்சத்தை மக்கள் நடமாட்டமில்லாத அல்லிநகரில் சாலை அமைக்கப்பட்டு வீணடிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு

இதுபோக மயானப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டுச் சிலர் மல்லிகை, வாழைத் தோட்டங்கள் அமைத்துள்ளனர். அந்நிலத்தின் ஒரு பகுதி சட்ட விரோதமாக விற்பனையும் செய்யப்பட்டுள்ளது. இதனால் மயானப்பகுதி சுருங்கிவிட்டது. எஞ்சியுள்ள பகுதியில்தான் தற்போது இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல், மயானப் பயன்பாட்டுக்காக 100 நாள் வேலை திட்டத்தில் அமைக்கப்பட்ட சர்வீஸ் சாலையும் குளமும் ஆக்கிரமிப்பாளர்களால் சிதைக்கப்பட்டுள்ளன.

எனவே, சோத்துப்பெரும்பேடு கிராமத்தில் மயானத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட நிலம் தொடர்பாக அரசு ஆவணங்களில் உரிய மாற்றங்களைச் செய்து உடனடியாக அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வருவாய்த் துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x