Published : 20 Feb 2015 07:05 PM
Last Updated : 20 Feb 2015 07:05 PM

தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை 42% உயர்வு

தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 42 சதவீதமாக உயர்ந்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் என்.முருகுமாறன் (அதிமுக), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) ஆகியோரது கேள்விகளுக்கு பதிலளித்து உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் கூறியதாவது:

"கிராமங்களை நோக்கி உயர்கல்வி என்பதே இந்த அரசின் நோக்கமாகும். தமிழகத்தில் அரசு கல்லூரிகள் 76, அரசு உதவி பெறும் கல்லூரிகள் 148, சுயநிதி கல்லூரிகள் 449, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் 37 என மொத்தம் 710 கல்லூரிகள் உள்ளன. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு புதிதாக 14 அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை 18 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சுதந்திரத்துக்கு முன்பு தொடங்கப்பட்டு அரசு உதவியுடன் செயல்பட்டு வந்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று கோரி மாணவர்கள், பேராசிரியர்கள் நீண்டகாலம் போராட்டம் நடத்தினர். அவர்களின் நலனை கருத்தில்கொண்டு அந்தப் பல்கலைக்கழகத்தை அரசு ஏற்று நடத்தி வருகிறது.

கோவை சிபிஎம் கல்லூரி, ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள குமரகுருபரன் அரசு உதவி பெறும் கல்லூரியை அரசு ஏற்க வேண்டும் என உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி கோரியுள்ளார். அந்த கல்லூரிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் பாதிக்கப்படுவதாக அரசு கவனத்துக்கு கொண்டுவந்தால் அவற்றை ஏற்று நடத்துவது பற்றி அரசு பரிசீலிக்கும்" என்றார் அமைச்சர் பழனியப்பன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x