Published : 07 Feb 2015 11:11 AM
Last Updated : 07 Feb 2015 11:11 AM
கரும்புக்கான நிலுவைத் தொகை கிடைக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு வந்த கரும்பு விவசாயி சம்பந்தம் அடுத்த மூன்றே நாளில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
தஞ்சை மாவட்டம் அண்டக்குடியைச் சேர்ந்த சம்பந்தம், கரும்புக்கு தமிழக அரசு அறிவித்த பரிந்துரை விலை ஒன்பது மாதங்களாக கிடைக்காததால் கடன் நெருக்கடிக்கு ஆளாகி உயிரை மாய்த்துக் கொண்டதாகச் சொல்லும் விவசாய சங்கத்தினர் “தமிழகத்தில் பெரும்பாலான கரும்பு விவசாயிகளின் இன்றைய நிலைமை இதுதான்’’ என்கிறார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகமோ, “எங்களுக்கு கட்டுபடியான விலையை நாங்கள் சம்பந்தத்துக்கு கொடுத்துவிட்டோம். அவரது தற்கொலைக்கு வேறு ஏதோ காரணம் இருக்கிறது’’ என்கிறது.
தமிழகத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் 16, பொதுத்துறை ஆலைகள் 2, தனியார் ஆலைகள் 24 என மொத்தம் 42 சர்க்கரை ஆலைகள் இயக்கத்தில் உள்ளன. இவைகளை நம்பி சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் இருக்கிறார்கள்.
மத்திய அரசு அறிவிக்கும் நியாயமான கட்டுபடியான விலையுடன் (எஃப்.ஆர்.பி.) மாநில அரசு அறிவிக்கும் பரிந்துரை விலையும் (எஸ்.ஏ.பி.) கரும்புக்கான விலையாக சர்க்கரை ஆலைகளால் வழங்கப்பட்டு வருகிறது. இதை உயர்த்தித் தர விவசாயிகள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், சர்க்கரை ஆலைகள் கடந்த ஒன்பது மாதங்களாக விவசாயிகளுக்கு எஸ்.ஏ.பி-யை வழங்காமல் இழுத்தடிக்கின்றன.
இது குறித்து ‘தி இந்து’விடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் விமல் நாதன், “சர்க்கரை ஆலை கள் லாபம் சம்பாதித்தால் கரும்பு விவசாயிகளுக்கு பங்கு கொடுப்பதில்லை. லாபத்தில் நட்டம் வந்தால் மட்டும் அதை விவசாயிகள் தலையில் சுமத்துகிறார்கள்.
லாபம் சம்பாதிப்பதற்காக 2008-09-ம் ஆண்டில் தமிழக சர்க்கரை ஆலைகள் 15 லட்சம் டன் சர்க்கரையை இறக்குமதி செய்தன. அப்போது உள்நாட்டிலும் உற்பத்தி அதிகமானதால் சர்க்கரை ஆலைகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதற்கு விவசாயிகள் எப்படி பொறுப்பேற்க முடியும்? ஜெயலலிதாவும் கருணாநிதியும் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போது கரும்புக்கு கூடுதல் விலை கொடுப்பது பற்றி தாராளமாய் பேசுகிறார்கள். ஆனால், அதிகாரத்துக்கு வந்ததும் வாய் திறப்பதில்லை. அரசு அதிகாரிகளும் ஆலை முதலாளிகளைக் காப்பாற்றுவதில்தான் குறியாய் இருக்கிறார்கள்
‘கரும்புக் கட்டுப்பாடுகள் சட்டம் 1966 பிரிவு 3-ஏ’ திருத்துவது மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வு’’ என்று சொன்னார்.
‘சிஸ்மா’ என்ன சொல்கிறது
சர்க்கரை ஆலைகளுக்காக பேசிய ’சிஸ்மா’ அமைப்பின் தலைவர் பழனி பெரியசாமி, “நமது அரசியல்வாதிகள் இந்த விவகாரத்தை பொருளாதாரம் சார்ந்த பிரச்சினையாக பார்க்காமல் அரசியலாக்குகிறார்கள். மற்ற எந்தப் பொருளுக்கும் விலை நிர்ணயம் செய்யாத அரசு, கரும்புக்கு நான்தான் விலை நிர்ணயம் செய்வேன் என்று சொல்வது சரியில்லை.
தமிழக அரசு கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு மட்டும் எஸ்.ஏ.பி. தொகையை மானியமாக வழங்கி இருக்கிறது. அதனால்தான் அந்த ஆலைகள் விவசாயிகளுக்கு நிலுவை இல்லாமல் கரும்புக்கான விலை வழங்கியுள்ளன. இந்தப் பாகுபாடு இல்லாமல் அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் தமிழக அரசு அந்த மானியத்தை வழங்க வேண்டும். அதேபோல், மத்திய அரசும் சர்க்கரை இறக்குமதிக்கான வரியை உயர்த்தி ஏற்றுமதிக்கு மானியங்களை வழங்க வேண்டும். இதையெல்லாம் செய்தால் மட்டுமே சர்க்கரை தொழிலையும் கரும்பு விவசாயிகளையும் காப்பாற்ற முடியும்’’ என்று சொன்னார்.
இயக்குநர், அமைச்சர் என்ன சொல்கிறார்கள்
கரும்பு விவசாயிகளுக்கு எஸ்.ஏ.பி. தொகை வழங்கப்படாதது குறித்து தமிழக அரசின் சர்க்கரை துறை இயக்குநர் மகேசன் காசிராஜனிடம் கேட்டபோது, “ஆலை அதிபர்கள் சர்க்கரை விலை கிலோ ரூ.25-க்குதான் விற்பதால் எஸ்.ஏ.பி. கொடுக்கமுடியாது என்கிறார்கள். அதெல்லாம் முடியாது கட்டாயம் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்று அவர்களை நிர்பந்தித்து வருகிறோம்’’ என்று சொன்னார்.
அமைச்சர் தங்கமணியோ, “வங்கிக் கடன் கிடைத்ததும் விவசாயிகளுக்கு எஸ்.ஏ.பி. தொகையை வழங்குவதாக ஆலைகள் தரப்பில் சொல்லி இருக்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் அவர்களைக் கட்டாயப்படுத்தி எஸ்.ஏ.பி-யை கொடுக்க வைப்போம்’’ என்று சொன்னார். கரும்பு விவசாயிகளுக்கு மட்டும் சர்க்கரை இனிக்க மறுப்பது நியாயம்தானா!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT