Last Updated : 03 Feb, 2015 03:57 PM

 

Published : 03 Feb 2015 03:57 PM
Last Updated : 03 Feb 2015 03:57 PM

உடுமலை அருகே பசுமைக் கிராமமாக மாறும் குறிஞ்சேரி ஊராட்சி

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே பெதப்பம்பட்டி சாலையில் உள்ளது குறிஞ்சேரி ஊராட்சி. 40 ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த கிராமத்தில், 2 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.

வீட்டு வரி ரூ.45 ஆயிரம், தண்ணீர் வரி ரூ.1.8 லட்சம் மட்டுமே ஊராட்சியின் ஆண்டு வருமானம். அதுவும் ஊராட்சியில் பணிபுரியும் ஊழியர்களின் ஊதியத்துக்கே சரியாக இருக்கும்.

அடிப்படை சுகாதாரம், குடிநீர் தட்டுப்பாடு, கரிசல் மண் சாலைகளால் மழைக்காலங்களில் அவதி, இடிந்த ஊராட்சி அலுவலகம் மற்றும் பள்ளி சுற்றுச்சுவர், கழிப்பிடம் இருந்தும் பயன்படுத்தாத நிலை உட்பட பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டி, கிராமத்தை பசுமையாக்க வேண்டுமென, ஊராட்சித் தலைவர் கே.வி.பாலகிருஷ்ணன் முயற்சி எடுத்து வருகிறார்.

உடுமலை, ஏரிப்பாளையம் என்ற இடத்தில் நகர எல்லை முடிந்தவுடன், ஊராட்சியின் எல்லை தொடங்குகிறது. இந்தக் கிராமம், 3 கி.மீ. தொலையில் அமைந்துள்ளது. நகர எல்லையில் தொடங்கி, கிராமம் வரை சாலையின் இருபுறமும் பல்வேறு வகையான மரக் கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

இந்த ஊராட்சியில், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் சிறப்பை கவனிக்கலாம். அதுமட்டுமின்றி, ஊராட்சியிலுள்ள மயானம், பள்ளி வளாகம், சுகாதார நிலைய வளாகம், ஓடை மற்றும் சாலை புறம்போக்கு என காலி இடங்களில் எல்லாம் தேக்கு, வேம்பு, புளியன், புங்கன் உள்ளிட்ட பல வகை மரக்கன்றுகளை காண முடியும்.

இது குறித்து ஊராட்சித் தலைவர் கூறியது:

இதுவரை 6 கி.மீ. தூரத்துக்கு ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இப்பணி, தொடர்ந்து நடைபெறும். இதனால், சாலையோரங்களை கழிப்பிடங்களாக பயன்படுத்துவது தவிர்க்கப்படும். ஊராட்சியில் கழிப்பிடங்கள் இருந்தும், அதனை யாரும் பயன்படுத்துவதில்லை. அதனால், மொத்தமுள்ள 485 குடும்பங்களில், 400 குடும்பத் தினருக்கு தனி நபர் கழிப்பிட திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இனி சுகாதாரப் பிரச்சினையும் இருக்காது. ஊராட்சிமன்றக் கட்டிடத்திலுள்ள தலைவர் அறை, எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இடிந்துள்ள பள்ளியின் சுற்றுச் சுவரை சீரமைக்க நிதி இல்லை. ஊராட்சியில், 15 சாலைகளை கான்கிரீட் சாலைகளாக மாற்ற வேண்டும்.

உடுமலை செல்லும் மக்களுக்கு பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும். கூட்டு குடிநீர் திட்டம் விரிவாக்கம் செய்யும்பட்சத்தில், அந்தப் பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்றார்.

இந்த ஊராட்சிக்கு, மாவட்ட நிர்வாகம் கூடுதல் நிதி ஒதுக்கி, அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதே, அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x