Published : 01 Apr 2014 10:27 AM
Last Updated : 01 Apr 2014 10:27 AM

போலீஸாரைக் கண்டித்து வைகோ சாலை மறியல்: ஒருமையில் பேசியதால் உருவெடுத்தது விவகாரம்

விருதுநகர் அருகே போலீஸாரைக் கண்டித்து மதிமுக பொதுச் செயலர் வைகோ திங்கள்கிழமை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதிதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அருப்புக்கோட்டையில் பிரச்சாரம் செய்வதற்காக வைகோ விருதுநகரிலிருந்து புறப்பட்டார். விருதுநகர்- அருப்புக்கோட்டை சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், வைகோ சென்ற வாகனத்தின் பின்னால் வந்த வாகனங்களைத் தடுத்து நிறுத்தினர். இதைக் கவனித்த வைகோ தனது வாகனத்தையும் நிறுத்துமாறு கூறினார்.

மதிமுக தொண்டர்கள் வந்த வாகனத்தை சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் சோதனையிடச் சென்ற போது, தாங்கள் வைகோவின் ஆதரவாளர்கள் என்றும் பிரச்சாரத்துக்காக அவரைப் பின்தொடர்ந்து செல்வதாகவும் கூறியுள்ளனர். அதற்கு மரியாதைக் குறைவாக சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் பேசினாராம்.

அப்போது, மதிமுகவினரை சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வைகோ, தன்னையும் சோதனையிடுங்கள், தனது வண்டியையும் சோதனையிடுங்கள், எனது பெட்டிகளையும் சோதனையிடுங்கள் எனக்கூறிக்கொண்டே தனது வாகனத்திலிருந்த பெட்டிகளை போலீஸாரிடம் திறந்துகாட்டி வைகோ சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.

அப்போது, அங்குவந்த அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் உதயகுமார், துணை வட்டாட்சியர் பொன்ராஜ் ஆகியோர் வைகோவுடன் பேசி அவரை சமாதானம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x